சுரேஷ் ரெய்னாவின் முன்னேற்றத்திற்கு பெண் கிரிக்கெட் வீராங்கனை வாழ்த்து
பல கஷ்டங்களை கடந்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னாவின் முன்னேற்றத்திற்கு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேல்சாமி வனிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடர் மூலம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் ரீ எண்ட்ரீ கொடுத்த சுரேஷ் ரெய்னா, தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் டி.20 தொடரின் மூன்று போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடினார்.
குறிப்பாக கடைசி டி.20 போட்டியில் அபாரமாக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 43 ரன்கள் எடுத்ததோடு, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுரேஷ் ரெய்னாவின் முன்னேற்றத்தை ரசிகர்கள் பலர் கொண்டாடி வரும் நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான வேலுசாமி வனிதா ரெய்னாவிற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
ரெய்னாவிற்கு பாராட்டு தெரிவித்து வேலுசாமி வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “நீங்கள் எங்கள் முன்மாதிரி. மீண்டும் உங்களை இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.