முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டது குறித்து பேசியுள்ளார் குல்தீப் யாதவ்.
வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வேட்டிங் செய்து 404 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா 293 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தபோது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் எதிர்பாராத விதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கொரை உயர்த்துவதற்கு உதவினர். இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் 40 ரன்கள் அடித்து அசத்தினார்.
குல்தீப் யாதவ், இந்திய அணிக்காக பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் வங்கதேசம் அணி 133 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய குல்தீப் யாதவ் போட்டி முடிந்த பிறகு தனது ஆல்ரவுண்டர் செயல்பாடு குறித்து பேசினார். அவர் கூறுகையில்,
“துவக்கத்தில் இரண்டு ஓவர்கள் எனக்கு சற்று பதட்டமாகவும் தயக்கமாகவும் இருந்தது. அதன் பிறகு நான் மிகுந்த நம்பிக்கையுடன் பந்துவீசினேன். வேகத்தை மாற்றியது மற்றும் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசியது என அனைத்தும் எனக்கு எடுபட்டது. காயத்திலிருந்து குணமடைந்த பிறகு நான் எனது பவுலின் மீது தீவிரமாக கவனம் செலுத்தினேன். அது தற்போது உதவியுள்ளது.
நான் பேட்டிங் செய்யும்பொழுது பந்தில் ஸ்பின் அவ்வளவாக இல்லை. ஆகையால் எந்த ஒரு அசவுகரியத்தையும் எனது பேட்டிங்கில் உணரவில்லை. எனவே மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கிறது என நினைத்து விட்டேன். நான் பவுலிங் செய்யும் பொழுது தான் நன்றாக பவுன்ஸ் செய்து பந்தை திருப்பினால் அழகாக விக்கெட் எடுக்கலாம் என உணர்ந்து கொண்டு, அதன்படி பந்துவீசினேன். எளிதாக விக்கெட் வந்தது. ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணிக்காக பங்களிப்பு கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இரண்டாவது இன்னிங்சிலும் இதேபோன்று ஒரு பவுலிங் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.” என்றார்.