அனுபவமிக்க தினேஷ் கார்த்திக்கை ஆட வைக்காமல் அண்மையில் அணியில் இணைந்த ரிஷப் பண்ட்டை ஆட வைத்திருப்பது சரியான தேர்வாக இல்லை என முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக் விராட் கோலியின் முடிவை விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை தோல்வியையே தழுவிராத அணியாக இருந்து வந்தாலும், நடுத்தர பேட்டிங் வரிசை இந்திய அணிக்கு கேள்விக்குறியாகவே இருந்துள்ளது. தவானின் உலகக்கோப்பை வெளியேற்றத்திற்கு பிறகு, கே எல் ராகுலை துவக்க வீரராக மாற்றி, விஜய் சங்கர் அணியில் கொண்டுவரப்பட்டார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக தன்னை நிரூபிக்க தவறி சொற்ப ரன்களில் விஜய் சங்கர் வெளியேறியதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை ஆட வைக்க வேண்டும் என பல விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய விராத் கோலி விஜய் சங்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் பேட்டியளித்தார். இதனால், இங்கிலாந்துக்கு எதிராகவும் விஜய் சங்கர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆச்சரியமூட்டும் விதமாக ரிஷப் பண்டிற்கு முதல் உலக கோப்பை போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இது குறித்து விமர்சனம் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் கூறுகையில், “தினேஷ் கார்த்திக் இரண்டாவது விக்கெட் கீப்பராக உலக கோப்பை அணியில் கொண்டுவரப்பட்டார். மேலும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடுத்தர வரிசையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியதை நாம் கண்டிருப்போம். அனுபவமிக்க அவரை எடுத்து வராமல் சில தினங்களுக்கு முன்பு அணியில் இடம்பெற்ற ரிஷப் பண்ட்டை கொண்டு வந்திருப்பது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.
மேலும் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், நேற்று விஜய் சங்கருக்கு ஆதரவாக பேசிய விராட் கோலியை இன்று ரிஷப் பண்ட்டை அணியில் வைத்திருப்பதுதான். நான் ஒப்புக் கொள்கிறேன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளாச கூடியவர்தான். ஆனால், இது போன்ற மிகப்பெரிய தொடர்களில் அனுபவம் பிரதானமாக இருந்து வருகிறது. விஜய் சங்கர், கே எல் ராகுல் இருவரும் தடுமாறி வருவது அனுபவம் குறைபாட்டை எடுத்துரைக்கிறது என்றார்.