உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்த அணிகள் தான் அரையிருதி க்கு செல்லும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கணித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இரு நாடுகளிலும் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியியை அறிவித்து விட்டன.
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் குறித்தும், ஒவ்வொரு நாடுகளில் உலகக்கோப்பை தொடரில் ஆடப்போகும் 15 பேர் கொண்ட அணி குறித்தும் பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் இந்த உலக கோப்பையில் எந்தெந்த வீரர்கள் மற்றும் அணிகள் சிறப்பாக ஆடும் என்ற கணிப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்துக் கணிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இந்த தொடரை நடத்தும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மோதும் என்று கணித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், “இந்தியா,ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் எனது கணிப்பின்படி அரையிறுதியில் மோதும். இதில் கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இந்திய அணிக்கு தான். விராட் கோலி நம்பிக்கை கொண்ட வீரராக இருப்பார்” என்றார்.
இந்த தொடரில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானவராக இருப்பார் எனவும் கணித்துள்ளார். இவர் கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்காக எப்படி செயல்பட்டார் என்பதையும் மேற்கோளிட்டு கூறினார்.