ஒருநாள் போட்டிகள் அழியாமல் நிலைத்திருக்க இந்த ஒரு மேட்ச் போதும்ங்க… மேக்ஸ்வெல்லை புகழ்ந்து தள்ளும் கில் கிறிஸ்ட்

ஆடம் கில் கிறிஸ்ட் - மேக்ஸ்வெல்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நிலைத்திருக்க இந்த ஒரு மேட்ச் போதும் என்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ் வெல்லின் பேட்டிங்கை பாராட்டி கிரிக்கெட் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் புகழாரம் சூட்டியுள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக ஒரு நாள் போட்டிகளில் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் போட்டிகளை விடவும் டி20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவை அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றன.

இவை அனைத்திற்கும் ஒரு படி மேலாக இந்தியாவில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சர்வதேச அளவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 2 மாதத்திற்கு நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் புதிய நட்சத்திரங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தேசிய அணியில் இடம் பெறக்கூடிய வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த போக்கு தொடர்ந்தால் அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்லும் என்ற அச்சம் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஒரு நாள் போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

292 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி 18.3 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் பின்னர் கேப்டன் பாட் கம்மின்சுடன் இணைந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த போட்டியில் 10 சிக்ஸர் 21 பவுண்டரி என 128 பந்துகளில் 201 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல்.

இந்த ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் ஏராளமானோர் சிலாகித்து பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது- ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த மேட்ச் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை காப்பாற்றுவதற்கு இந்த ஒரு ஆட்டம் போதுமானது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஆனால் இதுதான் நடந்திருக்கிறது.

இதுபோன்ற அதிசய தக்க வகையில் போட்டிகளில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணியால் நிச்சயம் முடியும். ஒரு நாள் போட்டியின் அழகு இதுதான். டி20 போட்டி ஆதிக்கத்தால் நாம் ஒருநாள் போட்டிகளின் அனுபவத்தை மறந்து வருகிறோம் என்று கூறியுள்ளார்

Mohamed:

This website uses cookies.