‘அரையிறுதியில் மோசமான ஆட்டம் வெளிப்படலாம் என்ற பயம் எழக்கூடும்…’- இந்திய அணியை அச்சுறுத்தும் விவியன் ரிச்சர்ட்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி வரும் புதன் அன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி அதிர்ச்சி கொடுப்பதற்கு பெயர் போனது என்பதால் இந்த மேட்ச்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அனுபவம் வாய்ந்த விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

தற்போதைய சூழலில் இந்திய அணியை பொருத்தளவில் பேட்டிங்கை விடவும் பவுலிங்கில் அட்டகாசமான ஃபார்மில் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. நாளை தீபாவளியையொட்டி நெதர்லாந்து அணியுடன் இந்தியா பெங்களூரு மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தனது 50 சதத்தை அடிப்பார் என்று இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரம் நெதர்லாந்து அணியின் பவுலிங் நன்றாக இருப்பதால் சற்று அசந்தாலும் இந்திய அணிக்கு சவால் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மேட்ச் இந்தியா ரிக்கார்டு வைப்பதற்கு உதவும் சூழலில் அரையிறுதி போட்டிதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த மேட்ச் குறித்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான விவியன் ரிச்சர்ட்ஸ் ஐசிசி தளத்தல் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

உலகக் கோப்பை தொடர் முழுவதுமே இந்திய அணியின் அணுகுமுறை அற்புதமாக உள்ளது. குறிப்பாக உற்சாகம் நிறைந்த மன நிலையில் வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் காணப்படுகிறார்கள். எவ்வளவு பெரிய அணி வந்தாலும் வெல்வது நாங்கள்தான் என்ற மன நிலை அவர்களிடம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இதனை அவர்கள் மாற்றாத வரையில் அவர்கள் தோற்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து.

ஆனால் இந்த மனநிலை ஒருவேளை மாறினால், அடுத்து நடக்கும் விஷயங்கள் தவறாக போகலாம். இதுவரை நன்றாக விளையாடி விட்டோம். அரையிறுதியில் மோசமான ஆட்டம் ஏற்படலாம் என்ற பயம் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் அந்த எதிர்மறை எண்ணத்தை முயற்சி செய்து விரட்டி விட வேண்டும். நான் விராட் கோலியின் மிகப்பெரும் ரசிகன். அவர் இன்னும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.