உலகக்கோப்பை இறுதிபோட்டி.. மழை பாதிப்பு இருக்குமா?

உலக கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கும் இறுதிப்போட்டியில் வானிலை எப்படி இருக்கும்? மழையும் பாதிப்பு இருக்குமா? என்பதை இங்கு காண்போம்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் மே 30ம் தேதி துவங்கி ஜூலை 14-ஆம் தேதியான இன்றுடன் முடிவடைய இருக்கிறது. லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு முதல் 4 இடங்கள் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் பலம்மிக்க இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக நியூசிலாந்து அணி முன்னேறியது. இரண்டாவது நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இது இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பை தொடர்களில் நான்காவது இறுதிப் போட்டியாகும். இதற்கு முன்னர் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு சென்று ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இம்முறை சொந்த மைதானத்தைச் சாதகமாகக் கொண்டு கோப்பையை வெல்ல முயற்சிக்கும்.

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் மழையின் பாதிப்பு தீவிரமாக இருந்ததால், ஆட்டம் ரிசர்வ் டே-விற்கு மாற்றப்பட்டது. இதனால் இந்தியா வசம் இருந்த ஆட்டம் அப்படியே நியூசிலாந்திற்கு மாறியது. மேலும் இரண்டாவது அரையிறுதி போட்டியின்போதும் ஓரிரு மழைத்துளிகள் காணப்பட்டாலும் போட்டியை பாதிக்கும் அளவிற்கு இல்லை.

இறுதிப்போட்டியின் வானிலை அறிக்கை

லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. லாட்ஸில் நாள் முழுவதும் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வெப்பநிலை அதிகபட்சமாக 21℃, குறைந்த பட்சம் 16℃ ஆக இருக்கும்.

மைதானத்தின் கள அறிக்கை

லார்ட்ஸ் மைதானம் ரன் குவிப்பிற்கு ஏதுவானதாக இருக்காது. முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்த ஸ்கோரை எட்ட வாய்ப்பு இருக்கிறது. மைதானத்தின் களம் தற்போது வறண்ட நிலையில் இருந்தாலும், வானிலை பொறுத்து மாறக்கூடியதாக இருக்கும். மழை வரும் அறிகுறி இருப்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து மைதானத்தின் சாதகத்தை பயன்படுத்திக்கொண்டு ரன்களை கட்டுப்படுத்தினால் சரியாக இருக்கும்.

Prabhu Soundar:

This website uses cookies.