இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நிச்சயமாக இங்கிலாந்து நாட்டில் வைத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்துதான் நடத்தி இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தற்போது கூறியுள்ளார்.
சொல்வதற்கு கடினமாக இருந்தாலும் இங்கிலாந்தில் முக்கியமான போட்டிகள் நடத்த கூடாது
இங்கிலாந்தில் வானிலை எப்போது வேண்டுமானாலும் மாற அதிக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முக்கியமான போட்டிகள் அதே சமயம் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் போன்ற தொடர்களை நிச்சயமாக இங்கிலாந்தில் வைத்து நடத்தக் கூடாது. போட்டியின் சுவாரசியத்தை அது குறைத்துவிடும் என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழை காரணமாக முதல் நாள் முழுவதும் வீணானது, இதனை அடுத்து இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி நிலையில் நேற்று நான்காவது நாளும் முழுவதுமாக வீணானது. இரண்டு ஆண்டுகள் நடந்த தொடரின் இறுதிப்போட்டி இப்படி மழை காரணமாக சரிவர நடக்காமல் போனது அனைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாகவே கெவின் பீட்டர்சன் முக்கியமான போட்டிகளை இங்கிலாந்தில் வைத்து நடத்தக்கூடாது என்று கனத்த இதயத்துடன் கூறியிருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகம் தான் சரியான இடம்
மேலும் இது மாதிரியான பிரம்மாண்டமான போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தலாம் என்றும் கூறியுள்ளார். எல்லா வசதிகளும் கொண்ட சிறந்த மைதானங்கள் அங்கு இருக்கின்றன. வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் அங்கு கிடைக்கப்படும். மேலும் முக்கியமாக வானிலை அங்கு எப்பொழுதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ப சிறப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஐசிசி தலைமை செயலகம் சற்று பக்கத்திலேயே( துபாயில் ) உள்ளது.
எனவே என்னைப் பொறுத்த வரையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அங்கு நடைபெற்று இருந்தால் நிச்சயமாக சுவாரசியம் குறைந்து இருக்காது மேலும் போட்டி நிர்ணயத்தில் நாட்களில் நடந்து முடிந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இன்று ஐந்தாவது நாளில் நியூசிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் விளையாட தயாராக இருக்கிறது. நாளை ஒருநாள் மட்டுமே ( ரிசர்வ் நாள் ) இருக்கின்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டி முழுவதுமாக நடைபெற்று முடியுமா, அல்லது ஆட்டம் சமனில் முடிவடைய அதிக வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.