ஆஸி., அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது, ஒருநாள் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 4 ரன்கள் அடித்த போது, ஒருநாள் அரங்கில் 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இவர் 217 இன்னிங்சில் இந்த இலக்கை கடந்து இருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில், அதிவேகமாக 9000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல், இந்திய வீரர்கள் மத்தியில் இரண்டாவது அதிவேக 9 ஆயிரம் ரன்கள் இதுவாகும்.
Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
194 இன்னிங்ஸ்களில் கேப்டன் விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை கடந்தது அதிவேகமாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 208 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்.
இந்த சாதனையை கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 235 இன்னிங்ஸ்களில் செய்திருக்கிறார். அதே போல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 228 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த பட்டியலில் முதல் 5 வீரர்களில் 4 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்:
- விராட்கோலி – இந்தியா – 194 இன்னிங்ஸ்கள்
- டி வில்லியர்ஸ் – தென்னாபிரிக்கா – 208 இன்னிங்ஸ்கள்
- ரோகித் சர்மா – இந்தியா – 217 இன்னிங்ஸ்கள்
- சவுரவ் கங்குலி – இந்தியா – 228 இன்னிங்ஸ்கள்
- சச்சின் டெண்டுல்கர் – இந்தியா – 235 இன்னிங்ஸ்கள்
- பிரையன் லாரா – 239 இன்னிங்ஸ்கள்