பேட்டிங் பிரச்சசனை குறித்து பேசாவிட்டால், வெளிநாட்டில் வெல்ல முடியாது: ரவிசாஸ்திரியை விளாசிய கங்குலி

இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து தோல்வி அடைந்ததற்கு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்று இங்கிலாந்திடம் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டபோதிலும், பேட்டிங்கில் மிகமோசமாக செயல்படுகிறது.

அணியில் விராட் கோலி, ரஹானே, புஜாரா தவிர மற்ற வீரர்கள் ஒருவரும் குறிப்பிடத்தகுந்த ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இந்திய அணியின் பேட்டிங் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு பயிற்சியாளர்கள் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் காரணம் என்று சவுரவ் கங்குலி குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சவுரவ் கங்குலி இந்திய அணியின் தோல்வி குறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் திறமைக்குறைவாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் செயல்பட்டு இருக்கிறார்கள். இதற்கு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் பொறுப்பேற்க வேண்டும். இந்திய அணியின் பேட்டிங் குறித்து சில முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்காவிட்டால், வெளிநாடுகளில் சென்று தொடரை வெல்ல முடியாது.

இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி என்ற ஒற்றை பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடினார், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விளையாடுவதற்கும், சிறப்பாகச் செயல்படுவதில் இருந்தும் ஏன் பின்வாங்கினார்கள். இந்த டெஸ்ட் தொடரின் முடிவுக்குப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதற்கு முன் இந்திய அணி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தோடு இந்தப் பயணத்தை ஒப்பிட்டால் பேட்டிங் திறமை, தைரியம் என்பது மிகவும் மோசமாகிவிட்டது.

இந்த மாதிரியான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்திய அணி நீண்டநாட்கள் சர்வதேச அளவில் பயணிக்க முடியாது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை இந்திய அணியின் வெளிநாட்டுப் பயணத்தின் சாதனைகளைப் பார்த்தால், ஏராளமான மிகப்பெரிய தொடர்களை இழந்து, தோல்வி அடைந்தே திரும்பி இருக்கிறது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விராட் கோலியிடமும், மற்ற பேட்ஸ்மேன்களிடமும் நல்ல வித்தியாசத்தைப் பார்த்துத்தான் பந்துவீசினார்கள். விராட் கோலியைவிட மற்ற பேட்ஸ்மேன்களைத்தான் அச்சுறுத்தும்வகையில் பந்துவீசினார்கள்.

விராட் கோலி களத்தில் இருந்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அணுகுமுறை வேறுமாதிரி இருக்கிறது. அதேசமயம், மற்ற இந்திய வீரர்களுக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அணுகும்முறை விராட் கோலிக்கு பந்துவீசுவதைக் காட்டிலும் வேறுபட்டு இருந்தது.

தற்போது அணியில் இருக்கும் இந்திய வீரர்களின் திறமை, பேட்டிங் திறன் தரம்தாழ்ந்துவிட்டது என்றே நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

முதலில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது. சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே இதில் யாரை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் கண்டுபிடிக்கலாம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அடித்த ஷாட்கள் இப்போது இங்கிலாந்தில் அடிக்கவில்லை. இதில் இருந்தே வீரர்களிடம் தனம்பிக்கை குறைவாக இருப்பதை அறியலாம்.

இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்

Vignesh G:

This website uses cookies.