தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லையா? என விவாதம் நடப்பதை பற்றி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டிற்கான வீரர்கள் பட்டியலில் பிசிசிஐயும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை. உள்நாட்டில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் அவர் இதுவரை விளையாடவில்லை. ஆகவே, இவரது எதிர்காலம் குறித்து ஏராளமான விவாதங்கள் எழுந்துள்ளன. பலரும் அவர் மீண்டும் ஆட்டக் களத்திற்கு திரும்புவாரா? இல்லையா? என மாறிமாறி கருத்து கூறி வருகின்றனர். சுருக்கமாக சொன்னால் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? இல்லையா? என்பது பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தை அலசி ஆராய்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அவர் தோனி குறித்து பேசுகையில், “தோனி நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாததால் அவரது மறுபிரவேசம் கடினமானதாக தெரிகிறது. எனவே, அவர் கிடைக்கும் போது கூட தேர்வாளர்கள் அவரைத் தேர்ந்தெடுப்பது எளிமையானதல்ல” எனக் கூறியுள்ளார்.
“இவ்வளவு காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பதால், அணிக்கு அவர் திரும்ப முடியும் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவருக்கு இன்னும் ஐ.பி.எல் வாய்ப்பு உள்ளது. அப்படி வந்தால் அவருடைய ஃபார்ம் முக்கியமானதாக இருக்கும். மேலும் நாட்டிற்கு எது சிறந்தது என்பதை தேர்வாளர்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஏனெனில் தோனி நாட்டிற்காக நிறைய செய்துள்ளார்.
ஆனால், அவர் 6-7 மாதங்கள் விளையாடாததால் அனைவரின் மனதிலும் ஒரு சந்தேகத்தை அவரே ஏற்படுத்தி இருக்கிறார். அது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது” என்று ஏபிபி நியூஸுக்கு கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
வர இருக்கும் ஐபிஎல் சீசன் பல இந்திய வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பை காரணமாக தேர்வாளர்கள் இவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.