இதே மாதிரி 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிக்கொண்டே இருந்தால், அது சரிவராது. எளிதாக உனக்கு ஆபத்தாக முடியும் என உம்ரான் மாலிக்-ஐ எச்சரித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.
ஐபிஎல் தொடரில் தனது அதிவேக பந்துவீச்சால் பலரின் கவனத்தை ஈர்த்த உம்ரான் மாலிக், அயர்லாந்து அணியுடன் நடந்த தொடரில் சர்வதேச டி20 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில், ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஐபிஎல் போல, சர்வதேச போட்டிகளிலும் 150+ கிமீ வேகத்தில் வீசிவருகிறார்.
ஒருசில போட்டிகளில் உம்ரான் மாலிக் வேகம் எடுபடுகிறது. மற்ற போட்டிகளில் ரன்களை வாரிகொடுக்கிறார். இவரது டி20 எக்கானமி 10.7 ஆகும். ஐபிஎல் போட்டிகளில் 8.9 ஆகும். இது மிகவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி, உம்ரான் மாலிக் பவுலிங்கை இந்திய அணியின் பவுலிங் கோச் சில அறிவுரைகள் கூறி சரி செய்யவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர். உம்ரான் மாலிக் பற்றி கம்பீர் கூறியதாவது:
“உம்ரான் மாலிக் இந்த வேகத்தை வைத்துக்கொண்டு சில போட்டிகளில் அபாரமாக செயல்படுவார். அதேநேரம் சில போட்டிகளில் ரன்களை அளவுக்கு மீறி வாரிக் கொடுத்துவிடுவார். இதை வைத்துக் கொண்டு, அவரை நம்பி போட்டியில் களமிறக்கலாம் என உறுதியாக சொல்ல முடியுமா?.
டி20 போன்ற போட்டிகளில் ஒருசில போட்டிகள் ரன்களை வாரிக்கொடுத்தாலே, அடுத்த சில போட்டிகளில் உங்களை எடுக்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்துவிடுவார்கள். இந்த தருணத்தில் பயிற்சியாளர் தலையிட்டு, வேகத்தை குறைத்துவீச வேண்டும் மற்றும் பந்தை திருப்புவதற்கு பழகவேண்டும் என்று அறிவுறுத்துவார். இது உம்ரான் மாலிக் இயல்பான பந்துவீச்சு கிடையாது.
மேலும், ரன்களை வாரிக்கொடுக்கிறார் என அவரை வெளியிலும் அனுப்பிவிடக்கூடாது. போதுமானவரை நிறைய போட்டிகள் விளையாட வைத்து, எந்த நேரத்தில் வேகத்தை குறைத்து வீசவேண்டும், எந்த நேரத்தில் 150 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக பந்துவீச வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். இந்த இடத்தில் தான் அணி நிர்வாகத்தின் பங்களிப்பும் உம்ரான் மாலிக் மீது தேவைப்படுகிறது. அணியின் பௌலிங் பயிற்சியாளர் உம்ரான் மாலிக் உடன் இருந்து பல அறிவுரைகளை எடுத்துச்சொல்ல வேண்டும்.” என்று கௌதம் கம்பீர் தனது பேட்டியில் தெரிவித்தார்.