நீங்கள் கிரிக்கெட்டுக்காக உங்கள் வாழ்க்கையை அர்பணித்துள்ளீர்கள் என தோனியை ட்விட்டரில் புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் கில்கிறிஸ்ட்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, லீக் சுற்றில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. லீக் சுற்றில் நியூசிலாந்து மிகவும் திணறியதால், இந்தியாவிடம் எளிதில் தோற்று வெளியேறும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், துரதிஷ்ட விதமாக இந்தியா 18 ரன்களில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்திய அணி 92/6 என தடுமாறிய நிலையில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது தோனி மட்டுமே களத்தில் இருந்தார். ஆதலால் இன்னும் நம்பிக்கை நீடித்தது. இறுதியில் எதிர்பாராத விதமாக அவரும் ரன் அவுட் ஆக அனைவரின் நம்பிக்கையின் தவிடுபொடியாகி இந்தியா 18 ரன்களில் வெளியேறி சோகத்தில் ஆழ்த்தினர்.
இறுதிவரை போராடிய தோனி, மற்றும் ஜடேஜா இருவரையும் இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். பல கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தோனியை வாழ்த்திய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட், தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை புகழ்ந்து பதிவிட்டார்.
“நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா… என்று உறுதியாகத் தெரியவில்லை ஆனால் நன்றி. நீங்கள் இந்த விளையாட்டுக்காக நிறைய கொடுத்துவிட்டீர்கள். உங்களது அமைதியையும் , சுய நம்பிக்கையையும் எப்போதும் பாராட்டுவேன்” என்றார்.