இப்படியொரு பிரச்சினையை வைத்துக்கொண்டு, சரிசெய்யாமல் இருக்கிறார் புவனேஸ்வர் குமார் – பாக்., முன்னாள் பந்துவீச்சாளர் சாடல்!

புவனேஸ்வர் குமாரிடம் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று பாகிஸ்தானில் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் என இரண்டு தொடர்களும் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு மோசமாகவே அமைந்தது. துவக்க ஓவர்களில் நன்றாக வீசக்கூடிய அவர் டெத் ஓவர்களில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வந்தார். ஆனால் ஆசியகோப்பை தொடரிலிருந்து துவக்க ஓவர்களிலும் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கிறார். காயத்திலிருந்து மீண்டு, இந்திய அணிக்கு திரும்பியதிலிருந்து அவரது பர்பாமன்ஸ் மோசமாகிக் கொண்டே வருகிறது.

ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நான்கு ரன்களுக்கு ஐந்து விக்கெட் வீழ்த்தினார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்றின் மீதமுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகள், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 தொடர் என மூன்றிலும் 19வது ஓவர்களை புவனேஸ்வர் குமார் வீசினார். அதில் 19, 14, மற்றும் 16 ரன்கள் முறையே விட்டுக் கொடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 18வது ஓவரை வீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இப்படி டெத் ஓவர்களில் படுமோசமாக செயல்பட்டு வரும் புவனேஸ்வர் குமாருக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்திருக்கிறார்.

“விமர்சனத்திற்கு செவி சாய்க்கவில்லை என்றால் உங்களால் கிரிக்கெட் உலகில் வளர முடியாது. விமர்சனம் என்பது வெறுமனே குத்திக் காட்டவேண்டும் என்று இல்லாமல் உங்கள் வளர்ச்சிக்காக உதவுவது என்ற பார்வையில் அணுக வேண்டும். புவனேஷ்வர் குமார் அதை செய்வதற்கு தவறி வருகிறார். அவரிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். தனது குறைகளை சுட்டிக் காட்டினால் அதற்கு செவி கொடுத்து சரி செய்ய வேண்டும். அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் சமீப காலமாக அவரது சிறந்த பார்மில் இல்லை. டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வந்த அவர், தற்போது துவக்க ஓவர்களிலும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து அணிக்கு ஆபத்தை விளைவித்து வருகிறது. தன்னிடம் என்ன தவறு இருக்கின்றது என புரிந்து கொண்டு, சரிசெய்ய வேண்டும். மீண்டும் நல்ல மனநிலையை வளர்த்துக் கொண்டு பந்துவீச்சில் களமிறங்க வேண்டும். பிசிசிஐ இவருக்கு சில காலம் ஓய்வு கொடுப்பதும் நல்லதே.” என்றார்.

Mohamed:

This website uses cookies.