அப்படியொரு ஜாம்பவான் இனிமேலும் நமக்கு கிடைக்கமாட்டார்; கவுதம் கம்பீர் கருத்து!

கபில்தேவ் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இனி இந்திய அணிக்கு கிடைக்கப்போவதில்லை என கௌதம் கம்பீர் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய அணிக்கு பல ஆல்ரவுண்டர்கள் வந்து சென்றாலும் கபில்தேவ் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் தற்போது வரை கிடைக்கவில்லை. அதற்கான தேடுதலில் தொடர்ந்து இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது  ஆனால் நிறைய சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் கிடைத்த போதிலும், வேகப்பந்துவீச்சில் ஆல்-ரவுண்டர்கள் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை.

ஸ்டூவர்ட் பின்னி, சிவம் துபே போன்றவர்கள் அந்த இடத்தில் எடுக்கப்பட்டாலும் அவர்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதை ஹார்திக் பாண்டியா சில ஆண்டுகள் நன்றாக செய்தார். ஆனால் அடிக்கடி காயம் காரணமாக அவர் வெளியேறி விடுவதால், அவர் மீதும் போதுமான நம்பிக்கை வைக்க முடியவில்லை.

தற்போது அந்த இடத்தில் தாக்கூர் இடம்பெற்று, சமீப காலத்தில் நன்றாக செயல்பட்டு வருகிறார். புதிதாக வெங்கடேச ஐயர் என்ற இளம் வீரரும் எடுக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து பல வீரர்களை பிசிசிஐ நிர்வாகம் தேர்வுக்குழு உபயோகித்து வருகிறது. எத்தனை பேர் வந்தாலும் சரி இனி கபில்தேவ் போன்ற ஒருவர் நமக்கு கிடைக்கப் போவதில்லை என்று சமீபத்திய பேட்டியில் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

“இந்திய அணி கத்துக்குட்டி அணியாக இருந்தபோது மிடில் ஆர்டரில் அப்போது உலக தரமிக்க வீரர்களுக்கு இணையாக செயல்பட்டு உலக கோப்பையை பெற்றுத் தந்த தலை சிறந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ். அவரது இடத்தை நிரப்புவது அத்தனை எளிதல்ல. அது நிறைவேறாத காரியம் ஆகும். அதற்கான தேடுதலில் ஈடுபடுவது பயனற்றது என நான் கருதுகிறேன்.

மற்றொரு கபில்தேவை தேடுவதைவிட இந்திய அணிக்கு எந்த வீரர் பொருத்தமாக இருப்பார்? யார் முழு திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்கிறார்கள்? என தீர்மானித்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அவரைப்போல வேண்டும் இவரைப்போல வேண்டுமென தேடுவது எந்தவிதத்திலும் சரியாக இருக்காது. அப்படி நினைத்திருந்தால் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பலர் நமக்கு கிடைத்திருக்க மாட்டர்.

யுவராஜ் சிங் விட்டுச்சென்ற இடத்தில் ஜடேஜா நன்றாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அதற்காக யுவராஜின் இடத்தை நிரப்பி விட்டார் என நாம் கூற இயலாது. ஜடேஜா தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். அதேபோல் வரும் வீரர்களும் அப்படித்தான் செயல்பட வேண்டும்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.