இந்திய கிரிக்கெட் அணி சீரழிவதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணம்; முன்னாள் வீரர் பிராட் ஹாக் பகிரங்க குற்றச்சாட்டு
ஐபிஎல் தொடரில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
மற்ற தொடர்களைவிட ஐபிஎல் தொடரில் அதிக பணம் புழங்குவதால் இந்த தொடருக்கு உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் எப்படியாவது பங்கேற்று விளையாட வேண்டும் என இந்திய இளம் வீரர்கள் உட்பட உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் பெரிதும் ஆசைப்படுகிறார்கள்.
என்னதான் இந்த ஐபிஎல் தொடர் மூலம் இளம் வீரர்களின் கிரிக்கெட் திறமையை அறிய முடிகிறது என்றாலும், இந்த ஐபிஎல் தொடர், லாங்கர் பார்மட்டை(டெஸ்ட் தொடரை)பெரிதும் பாதிப்பதாக பெரும்பாலான முன்னால் வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற தொடர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனவும் பி.சி.சிஐக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து வெளிப்படையாக பேசி வரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டை மற்றும் இளம் வீரர்களையும் பாதித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியதாவது, “என்னை பொருத்தவரையில் ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டை பாழாக்குகிறது, ஏனென்றால் வளர்ந்து வரும் இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் தான் அதிக பணம் புழங்குகிறது, இதில் எப்படியாவது விளையாடிவிட்டால் எளிதாக பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைக்கிறார்கள். இளம் வீரர்களின் நோக்கம் டி20 கிரிக்கெட் என மாறும் பொழுது அவர்கள் லாங்கர் பார்மட்டை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதனால் ஒரு செட்டான பேட்ஸ்மேனின் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும் என பந்துவீச்சாளருக்கு தெரியவில்லை. மேலும் ஒரு பேட்ஸ்மேனுக்கு இன்னிங்ஸ் முழுவதும் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பதும் தெரியவில்லை,இதன் காரணமாகவே இளம் வீரர்களால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்று சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, இளம் தலைமுறையினர் இந்திய அணிக்கு அறிமுகமாகிறார்கள் ஆனால் அவர்களால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை ” என ஐபிஎல் தொடரை பிராட் ஹாக் விமர்சித்திருந்தார்.
என்னதான் பிராட் ஹாக் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரை விமர்சித்தாலும் கௌதம் கம்பீர் உட்பட முன்னாள் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.