பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். அப்போது தனக்கு ஏற்பட்டு அனுபவத்தை “கிரிக்கெட் போட்கேஸ்ட்” எனும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். இப்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக கிராண்ட் பிளவர் இருந்து வருகிறார்.
அந்தப் பேட்டியில் “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானை சமாளிப்பது மிகவும் கடினம். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியின் இடைவேளையில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது நான் அவருக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஆத்திரமடைந்த அவர் கத்தியை எடுத்து என் கழுத்தில் வைத்துவிட்டார். அப்போது பதறிய மற்றவர்கள் யூனிஸ் கானை சமாதானப்படுத்தினார்கள்” என்றார்.
மேலும் தொடர்ந்த கிராண்ட் பிளவர் “பேட்டிங் பயிற்சியாளராக இருந்தது சுவாரஸ்யமாகவே இருந்தது. அது ஒரு கடினமான பயணம்தான். இப்போதும் கிரிக்கெட்டின் நுணக்கங்களை நான் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னமும் நிறைய இருக்கிறது. ஆனால் இப்போது நான் இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது” என்றார்.
பிரிஸ்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 0 ரன் எடுத்து அவுட் ஆன கான், இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்கள் எடுத்தார். சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள் குவித்தார் கான். ஆனால் அந்தத் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தோற்றது.
ஜிம்பாப்வே அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 3,457 ரன்களையும், 221 ஒருநாள் போட்டிகள் விளையாடி 6,571 ரன்களையும் குவித்தவர் ஆன்டி ஃபிளவர். தற்போது அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் கோச்சாக செயல்பட்டு வருகிறார்.