ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும்; இந்திய வீரருக்கு கிரிக்கெட் சங்கம் கோரிக்கை!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அறிவித்த ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வந்தவர் யுவராஜ் சிங். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையையும் பெறுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இவர் தொடர்நாயகன் விருதையும் பெற்றார். பின்னர் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். தொற்று நோயிலிருந்து குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்ததால் மீண்டும் இந்திய அணியில் ஆடுவதற்கு இவருக்கு இடம் கிடைத்தது.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் யுவராஜ் சிங் ஆடினார். பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இறுதியாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இது இந்திய ரசிகர்கள் பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவில் இருந்து விலகிக் கொண்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் புனாலி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு அவரிடம் நாங்கள் இதனை தெரிவித்தோம். அவர் இதற்கு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். பஞ்சாப் அணிக்கு ஆலோசகராகவும் அவர் வரவேண்டும் என நாங்கள் தெரிவித்தோம்.
டெஸ்ட் தொடர்களை அவர் ஆடவில்லை என்றாலும் குறைந்தபட்சம் லிமிடெட் ஓவர் போட்டிகளில் அவர் ஆட வேண்டும். அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” என தெரிவித்தார்