எதையுமே நம்பாதீங்க.. எவனோ கிளப்பிவிட்டது – கடுப்பாகி ட்வீட் போட்ட யுவராஜ் சிங்!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்.
இந்திய அணியில் மிக சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வந்த யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை என இரண்டையும் இந்திய அணி வெல்வதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்துள்ளார்.
2011ஆம் ஆண்டுக்கு பிறகு புற்றுநோயால் அவதிப்பட்ட யுவராஜ் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் இடம்பெற்றார். 2017ஆம் ஆண்டிற்கு பிறகு பார்ம் இல்லாததன் காரணமாக இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பெற முடியாமல் போனது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேநேரம், மற்ற நாடுகள் டி20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என இவற்றில் தொடர்ந்து பங்கேற்பதாக அறிவித்தார்.
திருமணமான பிறகு, தற்போது மனைவியுடன் இனைந்து பேஷன் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு வரும் யுவராஜ் இணையதளங்களில் வெளியாகும் வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியது.
முன்னணி பத்திரிக்கைகளும் இந்த செய்தியை வெகுவாக பரப்பின. இது உண்மை எனவும், விரைவில் யுவராஜ் சிங்கை வேறொரு பரிமாணத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் நம்பினார்.
இது தொடர்பாக யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “வலைத் தொடரில் அறிமுகமாவது தொடர்பான சமீபத்திய செய்திகள் குறித்து சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையில் அந்த செய்திகள் தவறானது, வலைத் தொடரில் எனது தம்பி இடம்பெறுகிறார், நான் அல்ல. சரியான நடவடிக்கைகளை எடுக்க ஊடகங்களில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்றார்.