முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் ‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லி, தோனி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியிலும் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பெயர் இடம் பெறவில்லை.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் வரும் மார்ச் 6-18 ல் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கவுள்ளது. இதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லி, முன்னாள் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்ற வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக ‘ஆல்-ரவுண்டர்’ விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘சைனாமேன்’ சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறவில்லை.
இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், தீபக் ஹூடாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
அணி விவரம்
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சகால், அக்சர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்