பிக்பாஷ் லீகில் ஆடப்போகும் முதல் இந்திய வீரர்; ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் தொடரில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிசிசிஐ ஒப்பந்தப்படி, இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறும் வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் எல்லாவித கிரிக்கெட் தொடர்களிலும் எவ்வித அனுமதியும் இன்றி பங்கு பெறலாம்.

இதன்படி கடந்த ஓராண்டாக கனடாவில் நடைபெற்ற கிலோபல் டி20 தொடரிலும், அபுதாபியில் நடைபெற்ற  10 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது மேனேஜர் புதிய தகவல் ஒன்று தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், “கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பேசி வருகிறோம். இந்த ஆண்டு யுவராஜ் பிக்பாஸ் லீக் தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.” என மேனஜர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணிக்காக 99ம் ஆண்டு அறிமுகமான யுவ்ராஜ் சிங் 2017 ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார். 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய இரண்டு தொடர்களிலும் அபாரமாக செயல்பட்ட நட்சத்திர ஆல்ரவுண்டர் இவர் ஆவார்.

குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றவர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு புற்று நோய் காரணமாக சில மாதங்கள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார்.

பின்னர் போதிய உடல் தகுதியின்மை மற்றும் சிறந்த ஃபார்ம் ஆகியவை இல்லாததால் அவ்வபோது இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டிற்கு பிறகு ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஒரு மனதாக அனைத்துவித சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.