இடது கை மன்னன் யுவராஜ் சிங் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்து இருக்கிறார். மேலும் யுவராஜ் சிங் நல்ல பார்மில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய அணியில் சேர்வதற்கு செய்யப்படும் தேர்வுகளில் ஒன்றான யோ- யோ டெஸ்டை யுவராஜ் சிங் எளிதாக வெல்வார் எனவும் அசாருதீன் தெரிவித்தார்.
மேலும் சில நாட்களுக்கு முன் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்த ரெய்னாவின் உடல் தகுதியையும் பாராட்டியும் அவர் பேசி இருக்கிறார்.
விளையாடாமல் போன யுவராஜ் சிங்
கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாமல் யுவராஜ் சிங் திணறி வருகிறார். இந்திய அணி மட்டும் இல்லாமல் ரஞ்சி அணியிலும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. பாண்டியா, ராகுல், தினேஷ் கார்த்திக் என அவரது இடத்தில் ஆட நிறைய வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் அவரது வாய்ப்பு கானல் நீராக மாறியிருக்கிறது.
யோ யோ டெஸ்டில் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் தற்போது யோ யோ டெஸ்டில் கலந்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். இந்த டெஸ்டில் சில நாட்களுக்கு முன் அஸ்வின் சிறப்பாக பர்பார்ம் செய்து இருந்தார். ஆனால் முன்னணி வீரரான ரெய்னா இதில் பெரிய அளவில் சொதப்பினார். தற்போது இதில் கலந்து கொண்டு தனது உடல் தகுதியை நிரூபிக்க யுவராஜ் சிங் முடிவு செய்து இருக்கிறார்.
யோ யோ டெஸ்ட் முறை
யோ யோ தேர்வு என அழைக்கப்படும் இந்த பிட்னஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இந்த டெஸ்டில் 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். இந்த டெஸ்டின் சரியாக ஓட முடியாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது. கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இந்த டெஸ்ட் மிகவும் கடினமான ஒன்றாகும்.
யுவராஜ் சிங் மீண்டும் வருவார்
யோ யோ டெஸ்டில் கலந்து கொள்ள இருக்கும் யுவராஜ் சிங் குறித்து அசாருதீன் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ”யுவராஜ் சிங் யோ யோ டெஸ்டை கண்டிப்பாக வெல்வார். ஆனால் அவர் தோல்வி அடைந்தாலும் இந்திய அணிக்கு திரும்புவார். சில நாட்களுக்கு முன் அவரை பார்த்தேன். அவர் மிக சிறப்பான பிட்னஸோடு இருக்கிறார். 2018 தொடக்கத்தில் அவர் கண்டிப்பாக விளையாடுவார்,” என்று அசாருதீன் கூறினார்.