ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் படுகேவலமான சாதனையை படைத்திருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர்கள் சஹல்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. வார்னர் மற்றும் பின்ச் இருவரும் துவக்க வீரர்களாக களம் கண்டனர். இந்த இருவரையும் விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாகத் திணறினர்.
இவர்கள் இருவரும் அரைசதம் கண்ட பிறகு, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 156 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வந்த வீரர்களும் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தனர். இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுக்க, தோல்வியைத் தழுவியது.
இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹல் 10 ஓவர்களில் 89 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு சுழல் பந்துவீச்சாளர் 10 ஓவர்களில் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். முதல் போட்டியில் இத்தகைய படு மோசமான சாதனை படைத்திருக்கும் சஹலை நெட்டிசன்கள் விமர்சனத்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இந்த படு மோசமான சாதனை சஹல் வசமே இருந்தது. அவரின் சாதனையை அவரே முறியடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக சஹல் 10 ஓவர்களில் 88 ரன்கள் விட்டுக் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது முதல் ஒருநாள் போட்டியில் 89 ரன்கள் விட்டுக் கொடுத்து மீண்டும் தனது சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக முதல் போட்டியில் நவ்தீப் சைனி 10 ஓவர்களில் 83 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். நட்சத்திர வீரர் பும்ரா 10 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் சோபிக்கவில்லை என்பதால் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கிறது.