சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல்
டி.20 அரங்கிற்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 12வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா, இலங்கை. வங்காள தேச அணிகள் பங்கேற்ற நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இந்தியா தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தது. அதன்பின் நடைபெற்ற நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். சாஹல் இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது பெற்றார்.
தொடர்நாயகன் விருது பெற்ற வாஷிங்டன் சுந்தர் 151 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாஹல் 14-வது இடத்தில் இருந்து முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதல் இடத்திலும், நியூசிலாந்து வீரர் இஷ் சோதி 3-வது இடத்திலும் உள்ளனர். வங்காள தேச வீரர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா 11-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 8-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அதேவேளையில் லோகேஷ் ராகுல் 12-வது இடத்திற்கும், ரோகித் சர்மா 13-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
அணிகள் தரவரிசையில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் முதல் இடத்திலும், ஆஸ்தரேலியா 2-வது இடத்திலும் உள்ளது.