இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறினார்.
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஆனால் இந்திய அணியின் கேப்டனான கோலி ஃபார்மை இழந்து தவித்து வருகிறார்.
இந்த நிலையில் கோலியின் ஃபார்ம் குறித்து கபில்தேவ் கூறியதாவது:
விராட் கோலியின் ஃபார்மை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவருடைய திறமை மற்றும் ஆற்றலைப் பற்றி நான் நன்றாக அறிவேன். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவர் சரிவிலிருந்து மீண்டு வருவார். அவர் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.
கோலி, இந்திய அணிக்கு முக்கியமான வீரர். அவர் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் ஒட்டு மொத்த அணியும் ஊக்கம் பெற்றுவிடும். எப்போதுமே கேப்டன் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால், வெற்றி கிடைத்துவிடும்.
பெüலர் ஜஸ்பிரித் பூம்ராவை முதல்முறையாக பார்த்தபோது, அவர் இவ்வளவு பெரிய பெளலராக வளர்ச்சி பெறுவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் வலுவான மனநிலை கொண்டவர். பந்துவீசும் ஸ்டைல் துல்லியமாக இல்லாதபோது “லைன் அன்ட் லென்த்’தில் பந்துவீசுவதும், யார்க்கர்களை வீசுவதும் கடினம். ஆனால் பூம்ராவின் பந்துவீசும் ஸ்டைல் துல்லியமாக இல்லாவிட்டாலும்கூட, அவர் அபாரமாக பந்துவீசுகிறார். அவர் என்ன நினைக்கிறாரோ, அதை செய்துவிடுகிறார்.
இவ்வாறு கபில் தேவ் கூறியுள்ளார்.