அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் நிகழ்ச்சி ஜனவரி 4ஆம் தேதி நடந்தது. அனைத்து அணிகளும் அவர்களின் சிறந்த வீரர்களை தக்கவைத்து கொண்டார்கள். அதில் சில ஆச்சரியங்களும் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் திரும்பினார்கள். சில அணிகள் முக்கிய வீரர்களை தக்கவைத்து கொண்டாலும், சில சிறந்த வீரர்களை வெளியே விட்டு விட்டது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிஇருக்கிறார்கள். தக்கவைத்து கொள்ளாமல் வெளியே விட்ட 10 முக்கிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
இயான் மோர்கன்
இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் இயான் மோர்கன் கடந்த வருடம் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடினார். சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் அந்த வாய்ப்பையும் உபயோகப்படுத்தவில்லை. இதனால், பஞ்சாப் அணி இவரை தக்கவைக்க வில்லை.
அஜிங்க்யா ரஹானே
கடந்த வருடம் புனே அணிக்காக விளையாடிய ரஹானே, அதற்கு முன்பு ராஜஸ்தான் அணிக்காக விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில், அடுத்த வருட ஐபில் தொடருக்கு ராஜஸ்தான் அணி அவரை தக்கவைத்து கொள்ளும் என அனைவரும் உறுதியாக இருந்தார்கள். ஆனால், அந்த அணி அனைவரையும் ஏமாற்றி விட்டது.
யுஸ்வேந்த்ர சஹால்
பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்த்ர சஹாலை அந்த அணி வெளியே விட்டது. கடந்த இரண்டு சீசனாக பெங்களூரு அணிக்கு சிறப்பாக பந்து வீசிய சஹால், இந்திய அணியின் முக்கிய வீரராகவும் மாறினார். ஆனாலும், அவரை அந்த அணி தக்கவைக்கவில்லை. RTM கார்டு உபயோகித்து வேண்டும் என்றால் அவரை மீண்டும் அணியில் சேர்க்கலாம்.
ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் சீசனில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சில முக்கிய நேரத்தில் விக்கெட்டுகள் எடுத்து கொடுத்து அணிக்கு வெற்றி வாங்கி தந்தவர் ஹர்பஜன். ஆனால், அவர் பார்மில் இல்லாததால், அவரை அடுத்த ஐபில் தொடருக்கு தக்கவைத்து கொள்ள வில்லை.
கிறிஸ் கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் கடந்த இரண்டு வருடமாக அவரின் ரசிகர்களை ஏமாற்றியதால், பெங்களூரு அணி கெய்லை வெளியே விட்டது. பெங்களூரு அணியில் இடம் பிடித்து முதல் இரண்டு சீசன் சிறப்பாக விளையாடிய அவர், அதன் பிறகு பார்ம் அவுட் ஆனார்.
யுவராஜ் சிங்
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த வருடம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். தேவையான நேரத்தில் அவர் முக்கிய இன்னிங்ஸ் விளையாடினாலும், அவரை அடுத்த ஐபில் தொடருக்கு தக்கவைக்கவில்லை.
கிறிஸ் லின்
இதில் நடந்த ஆச்சரியமே இது தான்… கடந்த வருடம் ஐபில் தொடரில் எதிரணியை துவம்சம் செய்த ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை கொல்கத்தா அணி வெளியே விட்டது. கொல்கத்தா அணி ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்து கொண்டதால், RTM கார்டு உபயோகித்தும் இவரை எடுக்க முடியாது. இதனால், ஏலத்தில் இவரை வாங்க ஒரு போரே நடக்கும்.
ஷிகர் தவான்
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக பல வருடமாக விளையாடி வரும் தவானை அடுத்த வருட ஐபில் தொடருக்கான அணியில் இருந்து வெளியே விட்டது. டேவிட் வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமாரை மட்டும் ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டுள்ளது.
கவுதம் கம்பிர்
இதுவரை கொல்கத்தா அணிக்கு இரண்டு கோப்பையை வாங்கி கொடுத்த கம்பிரை கொல்கத்தா அணி வெளியேவிட்டது. இதற்கும் சில பதில்கள் கிடைத்தது. தனது சொந்த ஊரான டெல்லிக்கு விளையாடிவிட்டு ஓய்வு பெற போவதாக கம்பிர் கேட்டதால், அவரை கொல்கத்தா அணி தக்கவைத்து கொள்ள வில்லை என தகவல் வந்தன.
ரவி அஸ்வின்
தமிழகத்தை சேர்ந்த ரவி அஸ்வின் தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் தற்போது அவர் பார்மில் இல்லாததால், அவருக்கு பதிலாக சென்னை அணி ஜடேஜாவை முடிவு செய்தது. ஏற்கனவே சென்னை அணி மூன்று இந்திய வீரர்களை தேர்வு செய்ததால், அஷ்வினை RTM கார்டு வைத்து கூட எடுக்க முடியாது. இதனால், அவர் வேறு அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.