ஏப்ரல் 7ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இது வரை ஐபில் வரலாற்றில் அதிக வெற்றிகள் குவித்துள்ள கேப்டன்களை பார்க்கலாம்.
ராகுல் டிராவிட்
பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், 48 ஐபில் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதில் 22 வெற்றியும், 26 தோல்வியும் பெற்றுள்ளார் டிராவிட்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஐதராபாத் அணிக்காக 2016ஆம் ஆண்டு நடந்த ஐபில் தொடரில் கோப்பையை வாங்கி கொடுத்தார். அவரது தலைமையில் விளையாடியுள்ள 47 போட்டிகளில் 26 வெற்றியும், 21 தோல்வியும் கண்டுள்ளது.
விரேந்தர் சேவாக்
இந்திய அணியின் அதிரடி தொடக்கவீரர் விரேந்தர் சேவாக் தனது ஐபில் வாழ்க்கையில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். 53 போட்டிகளில் கேப்டனாக இருந்த சேவாக், 28 வெற்றி மற்றும் 24 தோல்விகளை கண்டுள்ளார்.
ஷேன் வார்னே
ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் ஐபில் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. இது வரை 55 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள வார்னே, 30 வெற்றிகளையும் 24 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் 55 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 30 வெற்றியும், 21 தோல்விகளையும் கண்டுள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட்
டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் போன்ற அணிகளின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், 74 போட்டிகளில் கேப்டனாக இருந்து 35 வெற்றிகளை குவித்து, 39 தோல்விகளை கண்டுள்ளார்.
விராட் கோலி
முதல் ஐபில் தொடரில் இருந்தே பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, வெட்டோரி ஓய்வெடுத்த பிறகு, பெங்களூரு அணியின் கேப்டனாக செய்யப்பட்டு வருகிறார். 82 போட்டிகளில் கேப்டனாக இருந்த விராட் கோலி, 38 வெற்றிகளும் 39 தோல்விகளும் பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா
ஐபில் தொடரின் சிறந்த கேப்டன்கள் பட்டியலில் ரோகித் ஷர்மாவுக்கு கண்டிப்பாக இடம் உண்டு. மும்பை அணிக்கு வந்த பிறகு, அந்த அணியின் தலையெழுத்தை மாற்றிய ரோகித், மும்பை அணிக்காக மூன்று முறை கோப்பையை வென்றுள்ளார். 75 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 45 வெற்றியும், 29 தோல்விகளையும் கண்டுள்ளார்.
கவுதம் கம்பிர்
முதல் மூன்று தொடர் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பிர், பிறகு கொல்கத்தா அணிக்கு சென்றார். டெல்லி அணிக்கும் கேப்டனாக இருந்த கம்பிர், கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்துள்ளார். 123 போட்டிகளில் 70 வெற்றிகள் பெற்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் கம்பிர்.
மகேந்திர சிங் தோனி
ஐபில் தொடரின் சிறந்த கேப்டன் என்றால் அது நம் மகேந்திர சிங் தோனி தான் என்று நாம் அனைவருக்குமே தெரியும். 143 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, 83 வெற்றிகள் பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.