பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம் அடைந்ததால் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. பகல்-இரவு போட்டியான இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன நசீம் ஷா இடம் பிடித்திருந்தார். இவரது தாயார் நேற்றிரவு திடீரென மரணம் அடைந்தார். இதனால் இன்றைய போட்டியின்போது இரண்டு அணி வீரர்களும் தங்களது இரங்கலை தெரிவிக்கும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

5 முதல்தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள 16 வயது நசீம் ஷா, ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட நசீம் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெற்ற 9-வது இளம் வீரர் என்கிற பெருமையை அடைவார். மேலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடிய இளம் வீரர் என்கிற மற்றொரு பெருமையும் அவருக்குக் கிடைக்கும். நசீம் ஷா குறித்து மிஸ்பா கூறியதாவது:

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆஸ்திரேலியாவில், சூழலுக்கு ஏற்ப நசீம் ஷா பந்துவீச வேண்டும். எல்லோருக்கும் அவர் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று எப்படிப் பந்துவீசுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக அவர் பந்துவீச வேண்டும். புதிய மற்றும் பழைய பந்துகளில் அவர் சிறப்பாகப் பந்துவீசுவார். முதல்தர ஆட்டங்களில் அவர் அதை நிரூபித்துள்ளார். சரியாகப் பந்துவீசினால் அவருடைய வேகம் பேட்ஸ்மேன்களை ஆச்சர்யப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், நவம்பர் 21 அன்று தொடங்கவுள்ளது.