இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் நியூசிலாந்து நாளை களம் இறங்குகிறது.
நியூசிலாந்து அணி தற்போது ஐ.சி.சி. டி20 அணிகள் தர வரிசையில் 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என வென்றதன் மூலம் 124 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் நியூசிலாந்து தோல்வியை தழுவியது கிடையாது. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான தொடரை 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-1 எனக் கைப்பற்றினால் 126 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். 3-0 என வெற்றி பெற்றால் 132 புள்ளிகள் பெறும்.
அதேவேளையில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றால் நியூசிலாந்து 114 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திற்கு சரிந்துவிடும். பாகிஸ்தான் 124 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடிக்கும். இந்தியா 122 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறும்.
இந்தியா 2-1 என வெற்றி பெற்றால் நியூசிலாந்து 121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடிக்கும். இந்தியா 118 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திலேயே நீடிக்கும்.
இதனால் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றி முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான
- முதல் போட்டி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலும்,
- 2-வது போட்டி நவம்பர் 4-ந்தேதி ராஜ்கோட்டிலும்,
- 3-வது போட்டி நவம்பர் 7-ந்தேதி திருவனந்தபுரத்திலும் நடக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் ராஸ் டெய்லர் இடம்பிடித்துள்ளார்.
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அனுபவ வீரரான ராஸ் டெய்லருக்கு இடம் கிடைக்கவில்லை.நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டாட் ஆஸ்ட்லே இடம்பிடித்திருந்தார். பயிற்சி ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்ட்லே நீக்கப்பட்டு ராஸ் டெய்லர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஸ் டெய்லர் நியூசிலாந்து டி20 அணியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பிடித்திருந்தார். அதன்பின் அந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 155 ரன்கள் சேர்த்தார். இதனால் ராஸ் டெய்லருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான மூன்று டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேன் வில்லியம்சன் (கேப்டனம்), 2. மிட்செல் சான்ட்னெர், 3. இஷ் சோதி, 4. டிம் சவுத்தி, 5. ராஸ் டெய்லர், 6. டிரென்ட் போல்ட், 7. டாம் ப்ரூஸ், 8. கொலின் டி கிராண்ட்ஹோம், 9. மார்ட்டின் கப்தில், 10. மாட் ஹென்றி, 11. டாம் லாதம், 12. ஹென்றி நிக்கோல்ஸ், 13. ஆடம் மில்னே, 14. கொலின் முன்றோ, 15. க்ளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்).