நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியினர் மசூதியில் இருந்து ஹோட்டலுக்கு ஓடி உயிர் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்ட் சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி உள்ளது. இந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.
இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற போதிலும், 6 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
Video of Bangladesh Cricket Team Escaping through A park, When Terror Attack Happend.
All members of the Bangladesh Cricket Team in Christchurch, are safely back in the hotel.#Christchurch #NewZealand pic.twitter.com/IXwa3HO8ms
— Insight India Press (@IIPress24) March 15, 2019
வங்கதேச கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கிறிஸ்ட் சர்ச் நகரில் நாளை 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால், வீரர்கள் அனைவரும் மசூதிக்கு அருகே இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று நண்பகல் தொழுகைக்காக வீரர்கள் அனைவரும் சொகுசுப் பேருந்து ஒன்றில் மசூதிக்கு அழைத்து வரப்பட்டனர். மசூதி வளாகத்துக்குள் சில வீரர்களும், பல வீரர்கள் பேருந்திலும் அமர்ந்திருந்தபோது, மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
இதைக் கேட்டதும், மசூதி வளாகத்துக்குள் சென்ற வங்கதேச வீரர்கள் சிலர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார்கள். பின்னர் பேருந்தில் இருந்த வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிலிருந்த வீரர்களும் ஓடி ஹோட்டலுக்குச் சென்று உயிர் தப்பினார்கள்.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில், “அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தொழுகைக்குச் செல்வதற்காக சொகுசுப் பேருந்தில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
வங்கதேச வீரர் தமிம் இக்பால் ட்விட்டரில் கூறுகையில், ” துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த அணியும் தப்பியது. மிகவும் பதற்றத்துடன், அச்சத்துடன் இருக்கிறோம். தொடர்ந்து பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் ட்விட்டரில் கூறுகையில், “அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைவரையும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் இருந்து காத்துவிட்டார். நாங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணியில் திறன்மேம்பாட்டு ஆலோசகர் சீனிவாஸ் சந்திரசேகரன் ஃபேஸ்புக்கில் கூறுகையில், ” துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக ஜஸ்ட் எஸ்கேப் என்ற ரீதியில் உயிர் தப்பினோம். என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக, மோசமாகத் துடிக்கிறது. எங்கு பார்த்தாலும் பதற்றம் காணப்படுகிறது “எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாளேடான டெய்லி ஸ்டாரின் நிருபரும், வங்கதேச அணியுடன் இருப்பவருமான மஜார் உதின் ட்விட்டரில் கூறுகையில், “நாங்கள் மசூதிக்குள் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது. அந்த சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்து தப்பி ஓடி பேருந்தில் இருந்த வீரர்களுக்கும் தெரிவித்தோம். அவர்களும் பேருந்திலிருந்து குதித்து, சாலையில் ஓடி ஹோட்டலுக்கு வந்து உயிர் தப்பினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது இந்தப் போட்டி நடக்கும் மைதானம், இந்த மசூதிக்கு அருகேதான் இருக்கிறது. திட்டமிட்டபடி நாளை போட்டி தொடங்குமா என்ற சந்தெகம் இருந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம், நியூஸிலாந்து வாரியத்துடன் இது தொடர்பாகப் பேசியது. பிறகு, 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.