பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் விவகாரத்தில் சிஓஏ உத்தரவுக்கு இணங்காமல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிசிசிஐ நிர்வாகத்தை வினோத் ராய் தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏ மேற்கொண்டு வருகிறது.
வரும் அக்டோபர் 22-ஆம் தேதி பிசிசிஐக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாநில சங்கங்களும் செப். 12-ஆம் தேதி தங்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்த சிஓஏ உத்தரவிட்டிருந்தது. பல்வேறு மாநில சங்கங்கள் இதில் மெத்தனப்போக்கை கடைபிடித்த நிலையில், கால அவகாசத்தை 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது சிஓஏ.
நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்த புதிய சட்டவரையறையின்படி பிசிசிஐ, மாநில சங்க தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக சிஓஏ வினோத் ராய் கூறியதாவது:
மொத்தமுள்ள 38 சங்கங்களில் கடந்த வாரம் வரை 7 சங்கங்கள் எங்கள் அறிவிப்பை ஏற்காமல் செயல்பட்டன. தற்போது கர்நாடகம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சங்கங்கள் தங்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்த உள்ளன. மேலும் ஹரியாணா,தமிழகம், உத்தரகாண்ட், அருணாசலப்பிரதேசம் போன்றவை சிஓஏ உத்தரவை ஏற்காமல் உள்ளன.
ஹரியாணா, தமிழ்நாடு சங்கங்களில் இருந்து எவரும் எங்களை அணுகவில்லை. மாநில, பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் விவகாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார் ராய்.
இந்நிலையில்,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடைமுறை அதிகாரியான டி.கே.ஜெயின், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தொடர்பான பிற பதவிகளை உதறி ஒரேயொரு பதவியில் நீடிப்பதை உறுதி செய்யுமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில் டி.கே.ஜெயின் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலிக்கு சந்தேகத்தின் பலனை சாதகமாக அளிப்பதாகவும் ஆனால் ஒரு பதவிக்கு மேல் அவர் வகிக்கக் கூடாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் சவுரவ் கங்குலி பதவியில் இருக்கிறார் என்பது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்பதாக ஒழுங்குமுறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டால் இந்தப் புகார்களில் அவர் அளித்துள்ள பதில்கள் அதிலிருந்து அவர் ராஜினாமா செய்வதாக உடனடியாகக் கருதப்படும். இரண்டாவதாக மே 2019-ல் அவரது ஐபிஎல் அணியுடனான அவரது பதவியும் முடிவடைகிறது என்பதால் இந்த சந்தர்ப்பத்தில் அவரது ‘இரட்டைப் பதவி’ விவகாரம் நிர்வகிக்கக் கூடியதாகக் கருதப்படும்.
சட்டத்தை அறியாமல் இருப்பது ஒருவருக்கு விதிவிலக்கை அளிக்காது என்பதால் விதி எண் 38(2)-ன் படி சவுரவ் கங்கிலி தேவைப்படும் தகவல்களை அளிக்கக் கடமைப்பட்டவராகிறார். ஆனாலும் ஆகஸ்ட் 2018-க்குப் பிறகுதான் இந்த ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விதிமுறை அமலுக்கு வந்ததைக் கருத்தில் கொண்டு 3 பதவிகளில் இருப்பது இரட்டைப்பதவி நலன்கள் சார்ந்த விவகாரம் என்பதை அவர் உணர்ந்திருக வாய்ப்பில்லை என்பதால் அவருகுச் சந்தேகத்தின் பலனை சாதகமாக்க விரும்புகிறேன்.
இதன்படி சவுரவ் கங்குலி ஆதாயம் தரும் இரட்டைப்பதவிகளை துறந்து ஒரேயொரு பதவிக்கு மேல் அவர் வகிக்காமல் உறுதி செய்ய பிசிசிஐ-ஐ அறிவுறுத்துகிறேன்.”என்று டி.கே.ஜெயின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.