56 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய அணி தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தது. #TeamIndia
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 5-ந்தேதி முதல் ஜனவரி 28-ந்தேதி வரையும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 16-ந்தேதி வரையும், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி 18-ந்தேதி முதல் பிப்ரவரி 24-ந்தேதி வரையும் நடக்கிறது.
முதலில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மட்டும் கடந்த 27-ந்தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு மும்பையில் இருந்து புறப்பட்டது. இந்திய அணி துபாய் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா கேப்டவுன் சென்றடைவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி நேற்றிரவு கேப்டவுன் சென்றடைந்தது. அங்கிருந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.
1992-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. 2010-11ல் இந்தியா 1-1 எனத் தொடரை சமன் செய்தது. அதன்பின் 2013-ம் ஆண்டு 0-1 எனத் தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் தொடரை விட திருமணம் முக்கியமானது, 3 வார கால இடைவெளி ஒன்றும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராவதற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என விராட் கோலி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி சமீபத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இதையொட்டி அவர் இலங்கை அணிக்கு எதிரான குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் கலந்துகொள்ளவில்லை. இந்த ஆண்டில் மட்டும் விராட்கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 11 சதங்களுடன் 2,818 ரன்கள் வேட்டையாடி உள்ளார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கத் தொடருக்காக இந்திய அணி நேற்று முன்தினம் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக விராட் கோலி கூறுகையில், “நான் என் வாழ்க்கையின் முக்கிய தருணத்துக்காக (திருமணம்) கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தேன். இது எங்களுக்கு எப்போதுமே சிறந்த காலமாக இருக்கும். திருமண கொண்டாட்டத்துக்கு பிறகு கிரிக்கெட்டுக்குத் திரும்புவது கடினமல்ல. ஏனெனில் அது ரத்தத்துடன் கலந்துள்ளது. மற்ற வீரர்களும் அணி நிர்வாகமும் இதே போன்றது தான்.
கடந்த 3 வாரங்களில் நான் எதையும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்காக பயிற்சிகள் பெற்றுள்ளேன். மனதளவில் இந்த தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு தயாராக உள்ளேன்” என்றார்.
இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 5-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.