திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 24-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசித் தயாராகினார். ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
ஆனால்,களத்தில் வீரர்கள் பக்கம் இருந்த கேமிராவின் கண்கள், திடீரென மைதானத்தில் அமர்ந்திருந்த ஒரு ஜோடியின் மீது விழுந்தது.
ஆம், மைதானத்தில் இருந்த, ஒரு இளம் பெண்ணிடம், ஒரு இளைஞர் முழங்கால் இட்டு அமர்ந்து, கையில் மோதிரத்தோடு தனது காதலை வெளிப்படுத்தி சம்மதம் கேட்டார். இந்தக் காட்சி மைதானத்தில் உள்ள மெகா திரையில் ஒளிபரப்பாகவே ஒட்டுமொத்த அரங்கில் உள்ளவர்கள் பார்க்கத் தொடங்கினர்.
இதைப் பார்த்த கிரிக்கெட் வர்ணனையாளர் டேவிட் லாய்ட், மிகுந்த சத்தமிட்டு, இளைஞரின் காதல் நிறைவேறுமா, டிசிஷென் பென்டிங் என்று கூறி, அதைத் திரையில் ஒளிரச் செய்தார்.
ஆனால், சிலநிமிடங்கள் யோசித்த அந்தப் பெண், அந்த இளைஞரின் கையில் இருந்த மோதிரத்தைப் பெற்றுக்கொண்டு, அவரின் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு கட்டித் தழுவிக்கொண்டார். இதை கிரிக்கெட் வர்ணனையாளரும் அறிவிக்க அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கைதட்டி அந்த ஜோடியை வாழ்த்தினார்கள்.
அந்த ஜோடியின் பெயர் சரண் கில், பவன் பெனிஸ். இருவரின் பெயரை அறிவித்ததும் அரங்கமே கைதட்டியது. அதுமட்டுமல்லாமல், இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு லார்ட்ஸ் மைதான நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், அந்த ஜோடியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.