தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்தான நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. தென்ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா, ஜோர்ன் போர்ச்சுன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். இந்திய அணியில் ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றதால், லோகேஷ் ராகுல் இடம் பெறவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் குயின்டான் டி காக்கும், ரீஜா ஹென்ரிக்சும் களம் புகுந்தனர். இந்திய கேப்டன் கோலி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சு மூலம் (வாஷிங்டன் சுந்தர்) தாக்குதலை தொடங்கினார். அந்த ஓவரில் 6 ரன்கள் எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்ட குயின்டான் டி காக் சீரான வேகத்தில் ரன்களை திரட்டினார். ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து பவுமா வந்தார்.
20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து 150 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அடியெடுத்து வைத்தனர். நார்ஜேவின் ஓவரில் 2 சிக்சரை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய ரோகித் சர்மா 12 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
