2011-ல் தோனி தலைமையில் இந்திய அணி 2வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று சாம்பியன்களாகி சாதனை படைத்தது. அந்த அணியை ஒப்பிடும்போது தற்போதைய அணி உண்மையில் காகிதத்தில்தான் பலமான அணியாகத் தெரிகிறது என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் 2011 உலகக்கோப்பை இந்திய அணியை விட தற்போதைய கோலி தலைமை உலகக்கோப்பை இந்திய அணி பிரமாதம் என்கிறார் முன்னாள் உடல்/மனோதத்துவ பயிற்சியாளர் பேடி அப்டன்.
ஆனால் இந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் ஒரே அம்சம், பலமான அம்சம் தோனிதான் என்கிறார் அப்டன். தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய உலகக்கோப்பையை வெல்லும் அணிகளாகக் கருதப்படும் அணிகளுக்கு இடையிலான போட்டி உண்மையில் பிரமாதமான, கண்களுக்கு விருந்தாகும் போட்டிகளாகும். மிகச்சிறந்த கிரிக்கெட்டை அபரிமிதமானத் திறன் வெளிப்பாட்டுடன் நாம் பார்க்கவிருக்கிறோம்.
2011 உலகக்கோப்பையை வென்ற அணியின் பிரதான அம்சம் இந்த இந்திய அணியிடம் உள்ளதா என்று கேட்டால் அது எம்.எஸ்.தோனி என்றே கூறுவேன். இதுதான் பெரிய டிக் மார்க். நடப்பு இந்திய அணி நிச்சயமாக 2011 இந்திய அணியை விட உடல்/மனத் தகுதிகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. இதில் சந்தேகமேயில்லை.

இந்த இந்திய அணியின் புள்ளிவிவரங்களை நான் பார்க்கவில்லை, ஆனால் வெளிநாடுகளில் நடப்பு இந்திய அணியின் வெற்றிகள் 2011 இந்திய அணிக்கு சமமானது அல்லது அதைவிடச் சிறந்தது என்றே நான் கூறுவேன். ஆகவே 2011 அணியை விட இந்த அணி உலகக்கோப்பைக்குச் செல்லும்போது வலுவாகவே செல்கிறது.
இவ்வாறு கூறுகிறார் பாடி அப்டன்.
https://twitter.com/mufaddal_vohra/status/1129317701564944384