அக்டோபர் மாதம் துவங்குகிறது ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக்
ஆஃப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி.20 தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தொடருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலான வெளிநாட்டு வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்த தொடர் மூலம் இளம் வீரர்கள் தங்களின் திறைமையை வெளிப்படுத்தி, இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அணியிலும் தகுதி பெற்று வருகின்றனர்.
இந்த தொடருக்கு ரசிகர்களிடம் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதனை அப்படியே காப்பியடித்து ஆஸ்திரேலிய, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாடுகளில் வேறு வேறு பெயர்களில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் டி.20 தொடர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ஆஃப்கானிஸ்தான் அணியும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை அடையாளப்படுத்தும் விதமாக ஆஃப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் என்ற தொடரை நடத்த திட்டமிட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடரை தங்கள் நாட்டில் நடத்த முடியாததால், இந்த தொடரை துபாயில் வைத்து நடத்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியையும் துபாய் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஃப்கானிஸ்தான் பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சபீக் “2018 அக்டோபர் மாதம் இந்த தொடர் துவங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அனுமதியையும் தாங்கள் பெற்றுவிட்டதாகவும், ஆனால் எந்த எந்த மைதானத்தில் வைத்து போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்து மட்டும் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றும் சபீக் தெரிவித்துள்ளார்.
ஐந்து அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும் என்றும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.