உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் ஷேசாத்தை மாற்ற ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றது. அந்த அணியின் விக்கெட் கீப்பராகவும், அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வருபவர் முகமது ஷேசாத்.
ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைக்க இவரது ஆட்டம் முக்கியமானதாக இருந்தது என்றால் அது மிகையாகாது. இவர் உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
இந்த இரண்டு ஆட்டங்களிலும் ஷேசாத் விளையாடினார். அவரது மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஐசிசி-யிடம் மாற்றும் வீரரை தேர்வு செய்ய ஆப்கானிஸ்தான் வேண்டுகோள் வைத்தது. இதை ஏற்ற ஐசிசி டெக்னிக்கல் கமிட்டில் ஒப்புதல் வழங்கியது. அதன்படி இக்ராம் அலி கில்-ஐ மாற்று வீரராக ஆப்கானிஸ்தான் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டிக்கான பயிற்சியில் ஷேசாத் கலந்து கொண்டு, தான் உடற்தகுதியுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கன் அதிரடியாக நீக்கப்பட்டு, குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மூத்த வீரர்கள் கடும் விமர்சனம் செய்தனர். மேலும், ஷேசாத் வீரர்கள் அறையில் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

உலகக் கோப்பைப் போட்டியில் ஷேசாத் இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இதற்கு முன் பலஆட்டங்களில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி விடுத்துள்ள அறிவிப்பில் ” ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷேசாத் காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு பதிலாக இக்ரம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.