ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், கொல்கத்தா அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி, ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை ஷிவம் மவி வீசினார். அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது.
2-வது ஓவரை பிரசித் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை திரிபாதி சிக்ஸருக்கு அனுப்பினார். கடைசி மூன்று பந்துகளையும் பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. 3-வது ஓவரை மீண்டும் மவி வீசினார். இந்த முறை பட்லர் அதிரடியில் இறங்கினார். அந்த ஓவரில் பட்லர் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 28 ரன்கள் அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓவரில் 49 ரன்கள் குவித்தது. அந்த அணி தொடர்ச்சியாக 10 பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக மாற்றியது. இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்களை எளிதாக கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி 4 ஓவரில் 59 ரன்கள் குவித்தது. ரசல் வீசிய 5-வது ஓவரில் திரிபாதி ஆட்டமிழந்தார். ஆறு ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 68 ரன்கள் எடுத்தது. இதுவே பவர் பிளேவில் ராஜஸ்தான் அனி எடுக்கும் நான்காவது அதிகபட்ச ஸ்கோராகும். அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். இதனால் அந்த அணி 19 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது.
பவர் பிளேவில் (முதல் 6 ஓவர்கள்) 60 ரன்களுக்கு அதிகமாக ரன் எடுத்தும் இறுதியில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகள் பட்டியலில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கொல்கத்தா அணி தான் உள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக அந்த அணி 132 ரன்கள் எடுத்ததே இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அதேபோல தொடக்க பேட்ஸ்மேன்கள் பாட்னர்ஷிப்பில் 50க்கும் அதிகமாக ரன்கள் எடுத்த பின்னரும் குறைந்த ஸ்கோர் அடித்த அணிகள் பட்டியலிலும் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் அந்த அணி 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த பட்டியலில் பஞ்சாப் அணி முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இந்தாண்டு ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் 55 ரன்கள் எடுத்தும், 119 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.