சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் புதிர் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் சச்சின் டெண்டுல்கருக்கு எல்.பி. கொடுக்காதது குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் பேடில் வாங்க அம்பையர் இயன் கோல்ட் அவுட் என்றார். சச்சின் டெண்டுல்கர் டி.ஆர்.எஸ் முறையீடு செய்தார், அதில் லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லலாம் என்று தெரிகிறது. சச்சின் நாட் அவுட் என்று தீர்ப்பானது, ஆனால் சச்சின் பிளம்ப் அவுட் என்று சயீத் அஜ்மல் இப்போது கூறியுள்ளார்.
“சச்சின் டெண்டுல்கர் ஸ்டம்புக்கு முன்னால் கால்காப்பில் வாங்கினார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் எப்படி அவுட் கொடுக்காமல் விடப்பட்டது என்பது எனக்கு இன்னமும் கூட புரியாத புதிராகவே உள்ளது.
ரெஃபரல் செய்யும் போது 110% சச்சின் அவுட் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களுக்கு பந்து வீசுவது நம் உடல், மனம், திறமைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே அவர் அவுட் எனும்போது நாட் அவுட் கொடுத்தது இன்னமும் கூட எனக்கு புதிராகவே உள்ளது” என்று சயீத் அஜ்மல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் பதற்றமான இன்னிங்ஸ்: நிறைய லைஃப்கள்!
அஜ்மல் குறிப்பிடும் அந்த ஓவரின் போது சச்சின் 23 ரன்களில் இருந்தார். இந்த எல்.பி. தீர்ப்புக்கு அடுத்த பந்தே ஒரு நெருக்கமான ஸ்டம்ப்டு வாய்ப்பிலும் பிழைத்தார் சச்சின் டெண்டுல்கர். அந்த இன்னிங்ஸில் சச்சின் பதற்றமாகவே ஆடினார். சயீத் அஜ்மல் பந்துகளை எதிர்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டார்.
மொஹாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். கடைசியில் அஜ்மல்தான் சச்சின் விக்கெட்டை வீழ்த்தினார்.
சச்சின் டெண்டுல்கரின் நல்ல இன்னிங்ஸ் அது என்று கூறுவதற்கில்லை, ஷாகித் அப்ரிடி பந்தில் 14வது ஓவரில் மிஸ்பா கேட்சைத் தவற விடுவார், 20-வது ஓவரில் ஷாகித் அப்ரீடி பந்தில் யூனிஸ் கான் கையில் வந்த கேட்சை விட்டார். 30வது ஓவரில் கம்ரன் அக்மல் ஒரு கேட்சை விடுவார், பிறகு மீண்டும் 35-வது ஓவரில் ஹபீஸ் பந்தில் உமர் அக்மல் கேட்ச் வாய்ப்பை கோட்டை விடுவார்.