கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அம்பதி ராயுடு, திடீரென தனது முடிவிலிருந்து பின்வாங்கி, மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்புக்கு(ஹெச்சிஏ) அம்பதி ராயுடு எழுதிய கடிதத்தில், தான் உணர்ச்சிவசப்பட்டு ஓய்வு முடிவை அறிவித்துவிட்டேன் என்றும், ஹைதராபாத் அணிக்காக விளையாட விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் போது, இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் அம்பதி ராயுடு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யவில்லை. மாறாக, விஜய் சங்கரை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர். இதற்கு கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பதி ராயுடு கருத்து பதிவிட்டிருந்தது சர்ச்சையாக உருவானது.
இதையடுத்து, ஷிகர் தவண் காயத்தால் விலகிய நிலையில் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் மனம் வெறுத்த அம்பதி ராயுடு திடீரென அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
33 வயதான அம்பதி ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அவர் தன்னுடைய முடிவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்த மூத்த வீரர்கள், பிசிசிஐதான் ராயுடுவை இந்த முடிவுக்கு தள்ளின என்றும் குற்றம்சாட்டினார்கள்.

இந்த சூழலில் அம்பதி ராயுடு தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று, மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்புக்கு அம்பதி ராயுடு அனுப்பிய மின் அஞ்சலில் கூறுகையில், ” நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு் அறிவித்திருந்தேன். அந்த அறிவிப்பில் இருந்து வெளியே வந்து மீண்டும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விருப்பமாக இருக்கிறேன் என்பதை நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
என்னுடைய கடினமான நேரத்தில் என்னுடன் துணை இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விவிஎஸ் லட்சுமண், நோயல் டேவிட் ஆகியோர் எனக்கு ஆறுதல் தெரிவித்து, என்னை ஊக்கப்படுத்தி, இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டியது இருக்கிறது என்பதை உணர்த்தினார்கள், புரியவைத்தார்கள்.
மிகச்சிறந்த ஹைதராபாத் அணியில் நான் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பை இந்த சீசனில் எதிர்நோக்கி இருக்கிறேன், என்னுடைய திறமையை அறிந்து எனக்கு உதவுவார்கள் என நம்புகிறேன். செப்டம்பர் 10-ம் தேதியில் இருந்து ஹைதராபாத் அணியில் இணைய தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அம்பதி ராயுடுவுக்கு பதில் அளித்து ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு மின்அஞ்சல் அனுப்பியது. அதில் ” அம்பதி ராயுடு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றுவிட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் 2019-20-ம் ஆண்டுக்கான சீசனில் ஹைதராபாத் அணியில் தேர்வு செய்யப்படுவார்” எனத் தெரிவித்துள்ளது.