இந்தியா – இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடி 17 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரஹானே. இவருடைய மோசமான ஆட்டத்துக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் சமூகவலைத்தளங்களில் முட்டிக்கொண்டார்கள்.
3-வது டெஸ்டில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவதாகக் களமிறங்கினார் ரஹானே. அப்போது ட்விட்டரில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
ரஹானேவை மூன்றாவது வீரராக இறக்கியது நல்ல திட்டம். தென் ஆப்பிரிக்கா தொடருக்காக விமானம் ஏறும் முன்பு அவர் கட்டாயம் ரன்கள் எடுக்கவேண்டும் என்றார்.
சோப்ராவின் இந்தக் கருத்தை மற்றொரு முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளி ரசிக்கவில்லை. உடனே சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார்.
மிஸ்டர், சோப்ரா, மூன்றாவதாக இறங்கினால் அவர் எப்படி ரன் எடுப்பார்? யோசனை கூறமுடியுமா என்றார். இதற்கு சோப்ரா பதில் அளிக்காததால் மீண்டும் ட்வீட் செய்தார் காம்ப்ளி.
மிஸ்டர் சோப்ரா, அவர் எப்படி ரன் எடுப்பார்? இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் என்றார். சோப்ரா தொடர்ந்து அமைதி காத்ததால் மீண்டும் கேள்வியைத் தொடுத்தார்.
காலை வணக்கம் சோப்ரா. என்னுடைய முந்தைய ட்வீட்டுக்குப் பதில் அளியுங்கள். நம் ஒட்டுமொத்த தேசமும் அதைத் தெரிந்துகொள்ள விருப்பப்படுகிறது என்றார்.
இப்போது சோப்ரா பதில் அளித்தார்.
காலை வணக்கம். நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் தெரிந்துகொள்ள விருப்பப்படுவதற்கான ஆதாரத்தை அளியுங்கள் என்றார்.
இந்தப் பதிலை காம்ப்ளி விரும்பவில்லை. அவர் உடனே கேட்டார்.
மிஸ்டர் சோப்ரா, முக்கியமான கேள்வி இன்னமும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. எங்கே, எப்படி அவர் ரன் எடுப்பார் என்று
சொல்லுங்கள் என்றார்.
எதிரும் புதிருமான இந்த உரையாடலுக்கு ஆகாஷ் சோப்ரா முற்றுப்புள்ளி வைத்தார். அவர் சொன்னது இதுதான்.
இங்கு பேசுவதற்குப் பதிலாக இந்த விவகாரம் குறித்து நாம் தொலைப்பேசியில் பேசி விவாதிக்க வேண்டும். என் தொலைப்பேசி எண்ணை எப்படி வாங்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார். இத்துடன் இந்த உரையாடல் முற்றுப்பெற்றது.