பந்துவீச்சாளர்கள்தான் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும், நான் அச்சப்படமாட்டேன் என்று கொல்லக்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
12-வது ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்தது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரஸல் கொல்கத்தா அணி பெற்ற 4 வெற்றிகளில் ரஸல் 3-ல் ஆட்டநாயகன் விருதுகளை வென்று அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதுவரை 10 இன்னிங்ஸ்களில் ரஸல் 406 ரன்கள் சேர்ததுள்ளார். ஸ்டிரைக்கிங் ரேட் 206 ஆக இருக்கிறது.
ரஸல் போன்ற வீரர்கள் கடினமாக உழைத்தும் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் போன்ற மற்றவீரர்களின் சமஅளவு பங்களிப்பு செய்யாததால் கேகேஆர் அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இன்னும் கேகேஆர் அணிக்கு 3 போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த ஆட்டங்களை வென்றால்தான் ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும்
தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்றதற்கு அணி நிர்வாகத்தின் குழப்பமான செயல்கள் காரணம் என்று ரஸல் மிகுந்த காட்டமாக பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் குறிப்பாக, தவறான முடிவுகளை அதிகம் எடுப்பதால்தான் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறோம். சரியான பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் சரியான இடத்தில் பயன்படுத்துவதில்லை. இந்த தோல்விகளை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியாது. அடுத்து வரும் போட்டிகளில் 150 சதவீதம் உழைப்பை வெளிப்படுத்தி கேகேஆர் அணியை ப்ளே ஆப் சுற்றுக்குள் கொண்டுசெல்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கேகே ஆர் அணி இன்று மோதுகிறது. அந்த அணியில் பும்ரா, மலிங்கா, ஹர்திக் பாண்டியா ஆகிய திறமைவாய்ந்த பந்துவீச்சாளர்களை எவ்வாறு கேகேஆர் அணி சமாளிக்கப்போகிறது என்று நிருபர்கள் ரஸலிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஆன்ட்ரூ ரஸல் ஆவேசமாக பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், ” நான் எந்த பந்துவீச்சாளரைப் பார்த்தும் இதுவரை பயந்தது இல்லை. என்னைப் பார்த்துதான், என்னுடைய பேட்டிங்கைப் பார்த்துதான் பந்துவீச்சாளர்கள் பயப்பட வேண்டும். நான் எதற்காகவும் தற்பெருமையும் கொள்ளவில்லை. நான் இன்று பேட்டிங் செய்ய வரும்போது, யார் பந்துவீசினாலும் நான் சந்திக்கும் முதல் பந்து சிக்ஸருக்கு அனுப்ப முடியும். ஆட்டமிழப்பதைப் பற்றி அச்சப்படமாட்டேன்.
பும்ரா ஒருசிறந்த பந்துவீச்சாளர், மலிங்காவும்தான். ஆனால், அவர்களும் மனிதர்கள்தானே. சிலபந்துகளை அவர்களும் மோசமாக வீசுபவர்கள்தானே, அனைத்துபந்துகளையும் அவர்களால் துல்லியமாக வீச முடியாதல்லவா. அப்போது என்னுடைய பணி என்பது என்ன என்பது தெரியும் ” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியில் ரஸல் இதுவரை 42 சிக்ஸர்கள் அடித்து அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் பெருமையை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.