அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுத்ததே தோல்விக்கு முக்கியக் காரணம், இதனால் அணியின் சூழல்கெட்டுவிட்டது என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டியுள்ளார் வீரர் ஆனாட்ரூ ரஸல்.
12-வது ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக ஆல்ரவுண்டர் ரஸல் இருந்தார். 4 வெற்றிகளில் ரஸல் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றார். இதுவரை 10 இன்னிங்ஸ்களில் ரஸல் 406 ரன்கள் சேர்ததுள்ளார். ஸ்டிரைக்கிங் ரேட் 206 ஆக இருக்கிறது.
ரஸல் போன்ற வீரர்கள் கடினமாக உழைத்தும் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங்கில் மற்றவீரர்களின் சமஅளவு பங்களிப்பு செய்யாததால் கேகேஆர் அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 176 ரன்கள் சேர்த்தபின்பும் வெற்றியைக் தக்கவைக்க முடியாமல் கேகேஆர் தோற்றது. இந்த வேதனை தாங்காமல் ஆன்ட்ரூ ரஸல் மனம்திறந்து பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நாங்கள் சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தவறான முடிவுகளை நீங்கள் எடுத்தால், எப்போதும் போட்டியில் தோல்விஅடைவீர்கள், அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். எங்களுக்கு போதுமான அளவு காலஅவகாசம் இருந்தது, சில முக்கியமான போட்டிகளை மட்டும் குறிப்பிட்டு அந்த போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி சரியாகப் பந்துவீசி, சரியான பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்து, பேட் செய்து, பீல்டிங் செய்திருந்தாலே போட்டிகளை இழந்திருக்க வேண்டியதில்லை. வெற்றி பெற்றிருப்போம்.
தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடும் எனக்கு அணியில் கொடுக்கப்பட்ட இடம், களமிறங்கிய இடம் ஆரோக்கியமானதாக இல்லை. முடிவுகளின்படி, தவறான நேரத்தில், தவறாகப் பந்துவீசினோம். அதன்காரணமாகத்தான் நாங்கள் எளிதாக தோல்வி அடைய காரணமாக அமைந்தது.
அதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 176 ரன்கள் சேர்த்தும் நாங்கள் அந்த வெற்றியை தக்கவைக்க முடியாதது வேதனையாக இருக்கிறது. அந்த போட்டியில் சரியான முறையில் பேட்டிங் வரிசையும் இல்லை. எங்களின் பந்துவீச்சால், ராஜஸ்தான் அணியை 170 ரன்களுக்குள் சுருட்ட முடியவில்லை என்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் போன்ற வலிமையான அணிக்கு எதிராக ஏதாவது மிகப்பெரிய அற்புதம்தான் நிகழ்ந்தால்தான் வெல்ல முடியும்.

நாங்கள் பேட்டிங்கில் தடுமாறுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் பேட்டிங்கில் நாங்கள் தடுமாறவில்லை. நாங்கள் நல்ல ஸ்கோரை பெறும்போது அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், மோசமான பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீசினால், உண்மையாகவே உங்களால் கேட்சுகளை பிடிக்க முடியாது என்றால்… மோசமாக பீல்டிங் செய்தால்…ஒட்டமொத்தமாக அணியின் சூழல் ஆரோக்கியமாகஇல்லை. அதனால், தொடர்ந்து நான் அறைக்குள்ளேயே முடங்கி இருக்கிறேன்.
எங்களுக்கு நல்ல பயிற்சிகள் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம். எது எப்படி இருந்தாலும், உடல்நிலையை கட்டுக்கோப்பாக வைத்து, கேகேஆர் அணியை அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற வைப்போம்.
கடந்த போட்டிகளில் தோல்வியுற்றதால், கடந்த இரு நாட்களாக நான் அறைக்குள்ளே முடங்கி இருந்தேன். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று ஊரைச் சுற்றியும், மைதானத்தைச் சுற்றிவரும் சாதாரண வீரர் நான் இல்லை. என்னால் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து தலைநிமிர்ந்து மைதானத்தை சுற்றிவர வெட்கமாக இருந்தது.
ஆனால் உறுதியாகக் கூறுகிறேன் அடுத்த ஆட்டத்தில் எனது உணர்ச்சிவேகம், 150 ஆக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு இருக்கும் பற்றை டிவியில் காட்டமுடியாது களத்தில்தான்காட்டுவேன்.
இவ்வாறு ரஸல் தெரிவித்தார்.