இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி டிரா செய்தது. அதுவும் முழுநேர மாற்று வீரரின் உதவியுடன்!
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சரின் துல்லியமான பவுன்சரில் தலையில் பந்து தாக்கி காயமடைந்தார். இதனால் அவருக்கு மூளைச் செயல் திறன் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2-ஆவது இன்னிங்ஸில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது.

பொதுவாக களத்தில் இருக்கும் வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர் ஃபீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார். இதனால் ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளருக்கு பெரிய காயம் ஏற்பட்டால் களமிறங்கும் மாற்று வீரர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு செய்ய இயலாது. இது குறிப்பிட்ட அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
இதனிடையே தலையில் காயமடைந்த வீரரின் நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதியை கடந்த மாதம் அமல்படுத்தியது. அவ்வகையில் ஆட்டத்தின் நடுவே தலையில் பந்து தாக்கி காயமடைந்தவருக்கு பதிலாக முழுநேர மாற்று வீரரை ஒரு அணி தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் அவர் ஃபீல்டிங் மட்டுமல்லாது பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் தனது முழு பங்களிப்பை அளிக்க இயலும்.

இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இந்த புதிய விதியின் அடிப்படையில் களமிறங்கிய முதல் முழுநேர மாற்று வீரர் எனும் சிறப்பை ஆஸ்திரேலிய அணியின் மார்ஸ் லாம்பஷே பெற்றார். இதுபோன்ற நடைமுறை 142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதன்முறை. ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக களமிறங்கிய லாம்பஷே 59 ரன்கள் சேர்த்து ஆஸி. அணி 2-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
முன்னதாக, சூப்பர் சப் எனும் மாற்று வீரர் முறையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட அணியில் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தின் நடுவே மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், மாற்றம் செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட வீரர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு செய்திருக்கக் கூடாது என்பது நினைவுகூரத்தக்கது.
This is the real time speed of Jofra Archer striking Marnus Labuschagne #Ashes #Ashes2019 pic.twitter.com/E9xj1OgXLW
— Duncan McKenzie-McHarg (@duncanmcmc) August 18, 2019