தமிழக வீரர்கள் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற டிஎன்பிஎல் பெரிதும் உதவிகரமாக உள்ளது என்றார் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமந்த்குமார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: எங்களது அணியில் கடந்த ஆண்டு மூன்று வீரர்களைத் தவிர, ஏனையோர் அனைவரும் அணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனினும், அணியானது அனைத்து பிரிவிலும் தன்னிறைவு பெற்று சமமாக உள்ளது.
புதிய வீரர்களை வைத்து அணியை வழிநடத்தி செல்லமுடியுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் கிரிக்கெட்டுக்கு புதிதானவர்கள் அல்ல.
அவர்கள் இதற்கு முன்பு ஏதேனும் ஒரு அணி சார்பில் விளையாடியிருப்பார்கள். டி.என்.பி.எல். வீரர்களுக்கு சிறப்பான களத்தை ஏற்படுத்தி தரும். தமிழக வீரர்கள் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற டிஎன்பிஎல் பெரிதும் உதவிகரமாக உள்ளது என்றார் அவர்.
டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் போட்டிகள் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகின்றன.
ஐபிஎல் பாணியில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் ஆண்டில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், அடுத்த ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் சாம்பியன் பட்டம் வென்றது. உள்ளூர் வீரர்களின் திறனை கண்டறியும் இந்தத் தொடரின் 3-வது சீசன் இன்று திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 6.10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் அரை மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாடகர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் தலா 14 போட்டிகளும், சென்னையில் 4 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த சீசனில் பங்கேற்க உள்ள காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வங்கியுள்ளனர். அந்த அணிகளின் பெயர்களும் முறையே ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என மாற்றப்பட்டுள்ளன.