மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராயுடு, சிராஜ், குல்தீப் ஆகியோருக்குப் பதிலாக ஜாதவ், விஜய் சங்கர், சாஹல் ஆகியோர் இடம்பெற்றார்கள்.
பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார்கள். கேரி 5 ரன்களிலும் ஃபிஞ்ச் 14 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கவாஜாவும் மார்ஷும் அணியின் ஸ்கோரை 100 ரன்கள் வரை கொண்டுசென்றார்கள்.
அதுவரை பந்துவீசாமல் இருந்த சாஹலைப் பந்துவீச அழைத்தார் கோலி. முதல் ஓவரிலேயே மார்ஷை 39 ரன்களிலும் கவாஜாவை 34 ரன்களிலும் வீழ்த்தினார் சாஹல். இதையடுத்து அற்புதமான லெக் ஸ்பின் பந்துவீச்சால் 10 ரன்களில் ஸ்டாய்னிஸை வீழ்த்தினார் சாஹல்.
எனினும் நிலைமையைச் சரிசெய்யும்விதமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மேக்ஸ்வெல். கடகடவென 5 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு லேசாக மாறத் தொடங்கியது. உடனே ஷமியைப் பந்துவீச அழைத்தார் கோலி. அதற்கு உடனே பலன் கிடைத்தது. புவனேஸ்வர் குமாரின் அற்புதமான கேட்சினால் 26 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இதன்பிறகு ஆஸி. அணியால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஜை ரிச்சர்ட்சன் 16 ரன்களிள் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி ஆஸி.
அணி 200 ரன்களைக் கடக்கக் காரணமாக இருந்த ஹேண்ட்ஸ்காம்ப் 57 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவர் மேலும் அதிக ரன்கள் சேர்க்காமல் 58 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸாம்பா 8 ரன்களில் ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சாஹல். ஸ்டேன்லேக்கை போல்ட் செய்தார் ஷமி. இதன்மூலம் 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி. சாஹல் 6, புவனேஸ்வர் 2, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி இந்த ஆட்டத்தையும் தொடரையும் வெல்ல நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். 
49.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய அணி. தோனி 87, ஜாதவ் 61 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆட்ட நாயகன் விருது சாஹலுக்கும் தொடர் நாயகன் விருது தோனிக்கும் வழங்கப்பட்டன.
Another day, another final of sorts and @msdhoni hunts down another chase like he was born for that purpose. Unbelievable composure and resolve #INDvAUS #MSDhoni
— Ashwin ?? (@ashwinravi99) January 18, 2019