தென் ஆப்பிரிக்க தொடரின்போது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா, தங்களது பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்தியாவில் பந்துவீசுவதைப் போல, அந்நிய மண்ணிலும் சிறப்பாக பந்துவீச இயலும். மொயீன் அலி, நாதன் லயன் ஆகியோர் இங்கிலாந்தில் ஒரு முறையிலும், ஆஸ்திரேலியாவில் வேறு முறையிலும் பந்துவீசுவதை பார்க்க முடியும்.

அதேபோல், அஸ்வின் மற்றும் ஜடேஜா தென் ஆப்பிரிக்காவில் தங்களது பந்துவீச்சு முறையை மாற்றும் பட்சத்தில் அங்கு சிறப்பாக செயல்பட இயலும். அதற்கு அவர்கள் தங்களின் பந்துவீச்சு திறன், பந்துவீச்சு முறை, அதன் வேகம் ஆகியவற்றில் சிறிதளவு மாற்றம் செய்ய வேண்டும்.

இருப்பினும், அவர்கள் இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ பிளேயிங் லெவனில் களம் காணும் பட்சத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறையான சிந்தனைகள் இருக்கும். ஆட்டத்தை ரசித்து விளையாடுமாறு அவர் கூறுவார். ஒரு வீரர் சிறப்பாக செயல்படாவிட்டால், ரவி சாஸ்திரி அவருக்கு ஆதரவாக இருந்து, அவரிடம் நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி அவரை மேம்படுத்துவார்.

அதேபோல் கேப்டன் விராட் கோலியும் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிப்பவர். ‘உனது விருப்பப்படி விளையாடு. உனக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். முடிவுகள் குறித்து கவலைப்படாதே’ என்றே எப்போதும் கூறுவார் என்று ரஹானே கூறினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.