டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் மூன்றாவது இடத்தில் இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இந்தியா.

550 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 76.5 ஓவர்களில் 245 ரன்களுக்குச் சுருண்டது. இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹெராத் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதையடுத்து அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹெராத் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர்களில் சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்திலும், விராட் கோலி 5-ஆவது இடத்திலும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இங்கிலாந்து. பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

டெஸ்ட் பேட்டிங்கில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 12 இடங்கள் முன்னேறி 25-வது இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரு இடங்கள் முன்னேறி 19-வது இடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடித்துள்ளார்கள். ஸ்டோக்ஸுக்கு 5-ம் இடம்.

இதனை தொடர்ந்து இலங்கை வீரர் மத்தியூஸ் 17வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பிறகு பந்து வீச்சாளரான பிரதீப் 30வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.