இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டம் செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆப்கன் அணி 252 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் ஷஸாத் அபாரமாக ஆடி 7 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 124 ரன்களை எடுத்தார். இந்திய அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்களுடன் ஆல் அவுட்டானது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகளில் தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்கள்.
ஆனால் இருவருமே டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தியிருந்தால் ஆட்டமிழந்திருக்க மாட்டார்கள். இரண்டிலும் கள நடுவர் தவறு செய்திருந்தார். ஆனால் இந்திய அணி வசம் ரெவ்யூஸ் எதுவும் மிச்சம் இல்லாததால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. இருந்த ஒரு ரெவ்யூவையும் ராகுல் தவறுதலாகப் பயன்படுத்தியிருந்தார். இதுகுறித்து ராகுல் கூறியதாவது:
ஒரே ஒரு ரெவ்யூ மட்டும் இருக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்துவது கடினம் தான். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் அவுட் ஆனபோது ரெவ்யூவைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. அவுட்சைடில் பந்து பட்டதாக எண்ணியதால் அதைப் பயன்படுத்தினேன். வெளியே வந்தபிறகுதான் அதுகுறித்து யோசிக்கத் தோன்றுகிறது. இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். பின்னால் வருகிற வீரர்களுக்கு நான் அதை விட்டுத் தந்திருக்கவேண்டும். இனிமேல் இதுபோல நடந்தால் நான் கவனமாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய அணியின் ஓப்பனர் கே.எல்.ராகுல், 21-வது ஓவரின்போது ரஷீத்கான் வீசிய பந்துக்கு நடுவர் எல்.பி.டபில்யூ. வழங்கியதை அடுத்து ரிவியூவ் கேட்டார். ஆனால், அந்த ரிவியூவ் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதமாக அமைந்தது. இதனால், அடுத்தடுத்து வந்த தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு தவறாக வழங்கப்பட்ட நடுவர் எல்.டபில்யூ. தீர்ப்புகள், ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.
எனவே, தனது விக்கெட்டின் போது ரிவியூவ் கேட்டது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது. தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் களத்தில் இருந்திருந்தால் போட்டியின் போக்கு மாறியிருக்கும் என ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஆட்டத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய வீரர் கே.எல்.ராகுலும் பாராட்டியுள்ளார். 
“கடந்த இரண்டு வருடங்களாக ஆப்கானிஸ்தான் அணி எவ்வளவு முன்னேறி வருகிறது என்பதை பார்த்திருக்கிறோம். ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான், நபி போன்றவர்கள் ஐபிஎல் விளையாடியது போலவே சர்வதேச அளவில் பல லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை வெல்லக்கூடிய அணி என்று பார்க்க முடியாது. டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் போட்டிப்போட்டுக் கொண்டு ஆடுகின்றனர். அதை மீண்டும் மீண்டும் நிரூபித்தும் வருகிறார்கள்.
இன்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் அவர்கள் விளையாடுவதைப் பார்க்க நன்றாக இருந்தது. இரண்டு தரப்பும் நன்றாக ஆடும் ஒரு போட்டியில் நாம் பங்கெடுக்க விரும்புவோம். அப்படித்தான் இருந்தது. முடிவு இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் எப்படியிருந்தாலும் இப்படியொரு போட்டியை விளையாடியதில் மகிழ்ச்சி. இது நீண்ட நாள் நினைவில் இருக்கும்” என்று கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.