பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி. இவர் இப்போது இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். இவரது 2 வயது மகள் நூர் பாத்திமா. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நூர் பாத்திமா நேற்று உயிரிழந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நேற்று விளையாடிய ஆசிப் அலிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆசிப் அலி நேற்று இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இதில் 22 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் அறிவித்த முதல்கட்ட உலகக்கோப்பைக்கான அணியில் ஆசிப் அலி இடம்பெறவில்லை. இன்று மூன்றுபேரை நீக்கி அதற்கான மாற்று வீரர்களை அறிவித்துள்ளது. இதில் ஆசிப் அலி பெயர் இடம்பெற்றுள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
10 அணிகளும் கடந்த மாதம் 24-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட முதல்கட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணியில் அபிட் அலி, ஜுனைத் கான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
உலகக்கோப்பைக்கான அணியில் வருகின்ற 23-ந்தேதிக்குள் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்ததால் முகமது அமிருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அபிட் அலி, ஜுனைத் கான், பர்ஹீம் அஷ்ரப் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஆசிப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சர்பராஸ் அகமது, 2. பகர் ஜமான், 3. இமாம்-உல்-ஹக், 4. பாபர் ஆசம், 5. சோயிப் மாலிக், 6. முகமது ஹபீஸ், 7. ஆசிப் அலி, 8. சதாப் கான், 9. இமாத் வாசிம், 10. ஹரிஸ் சோஹைல், 11. ஹசன் அலி, 12. ஷஹீன் அப்ரிடி, 13. முகமது அமிர், 14. வஹாப் ரியாஸ், 15. முகமது ஹஸ்னைன்.